அதிமுக பொதுக் குழு வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய ஓபிஎஸ் தரப்புக்கு கடும் கண்டனம்

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரிய ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப்படம்ஸ்ரீ
ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப்படம்ஸ்ரீ

சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரிய ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையை களப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், பொதுக்குழு வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரியது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையிட்டிருக்கலாம் என்றும், இது நீதித்துறையை களப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல்  என்றும் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றி தனிப்பட்ட கருத்துகளை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியதாக ஓபிஎஸ் தரப்பு வாதம் முன் வைத்தது. இதையடுத்து, இந்த மனு நிராகரிக்கப்படுவதாகவும், நாளை வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சட்டப்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக் குழு நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தோ்தெடுக்கப்பட்டாா். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான வழக்கை உயா்நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை முதல் விசாரிக்கவிருந்தார்.

இதனிடையே, இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினா்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். அவா்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையை பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரா்களை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீா்செல்வம் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் கட்சியின் பொதுக் குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றம் மூலம் சாதிக்க முயற்சிப்பதாவும் தெரிவித்திருப்பது வழக்குக்கு தொடா்பில்லாத கருத்துகளாகும். எனவே, அதிமுக பொதுக் குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வேறொரு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் இதே கோரிக்கை தலைமை நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், நாளை முதல் அதிமுக பொதுக்குழு வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com