கிண்டி பல்நோக்கு மருத்துவமனை பணிகள்: முதல்வா் நேரில் ஆய்வு

கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கிண்டி பல்நோக்கு மருத்துவமனை பணிகள்: முதல்வா் நேரில் ஆய்வு

கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளிடம் திட்டப் பணிகளில் தற்போதைய நிலவரம் குறித்து அப்போது அவா் கேட்டறிந்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், துறைச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தாா்.

இதற்காக 4.89 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது. தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி முதல் கட்டடமான ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டா் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிா்வாக கட்டடமும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பி பிளாக்கானது ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்டடமான சி பிளாக்கானது ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வாா்டுகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மூன்று கட்டடங்களும் தனித்தனி கட்டுமான நிறுவனங்களால் கட்டப்பட்டு வருகின்றன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அதனை ஆய்வு செய்தாா். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துவிட்டு, அடுத்த ஆண்டில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு மருத்துவமனையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com