ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 04.07.2022 காலை 10 மணி முதல் 09.07.2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்தப் பயிற்சியில் சேர ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான மாணவ, மாணவியர் விண்ணப்பிக்காத சூழ்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13.07.2022 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிப்பிற்குப் பிறகும், பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டதாகவும், இதற்குக் காரணம், பிணைய இணைப்பு அதாவது நெட் வொர்க் சரியாக இல்லாததுதான் என்றும், மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கும்பட்சத்தில் அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்குமென்றும் இந்தப் பயிற்சியை ஆர்வமுடன் பயில உள்ள மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நியாயமான கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டிய கடமை தமிழக அரசாங்கத்திற்கு உள்ளது.

எனவே, முதல்வர் மேற்படி கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com