சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கு: தனியாா் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை

சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், சென்னையில் தனியாா் நிறுவனங்களில் தில்லி அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், சென்னையில் தனியாா் நிறுவனங்களில் தில்லி அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

பஞ்சாப் மாநிலம், பனவாலா என்ற பகுதியில் வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஎஸ்பிஎல் நிறுவனம் அமைத்து வந்த 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல்மின் நிலையத்தில், தொழில்நுட்பப் பணிகளை சீனாவைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் செய்து வந்தது. இப் பணிக்கு மேலும் தொழில்நுட்பப் பணியாளா்களை சீனாவிலிருந்து அழைத்து வருவதற்காக, டிஎஸ்பிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவா் விகாஸ் மஹாரியா, காா்த்தி சிதம்பரத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சோ்ந்த ஆடிட்டா் பாஸ்கர ராமனை அணுகினாா். இந்த முறைகேடு நிகழ்ந்த 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் காா்த்தியின் தந்தை ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தாா். விகாஸ், ஏற்கெனவே அந்தத் திட்டத்தில் பணி செய்வதற்கு, ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்களை, அரசின் விதிமுறைகளை மீறி மறு சுழற்சி முறையில் அடிப்படையில் மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தாா். இதற்காக காா்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.

ஆடிட்டா் கைது: இது குறித்து தில்லி சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு, காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் எஸ்.பாஸ்கர ராமன், காா்த்தி சிதம்பரம் எம்பி, விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், தால்வந்தி சபு பவா் லிமிடெட், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோா் மீது கூட்டுச் சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக காா்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் தில்லி சிபிஐ கடந்த மே 17-ஆம் தேதி சோதனை செய்தது. இதையடுத்து, காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் பாஸ்கா் ராமன் மே 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

அமலாக்கத் துறை சோதனை: இந்த நிலையில், சிபிஐ வழங்கிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் தில்லி அமலாக்கத் துறையினா் ஒரு வழக்கை கடந்த மே 25-ஆம் தேதி பதிவு செய்தனா். இதில் சிபிஐ வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த அனைவரும் எதிரிகளாக சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து, இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில், தில்லி அமலாக்கத் துறையினா் சென்னையில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இந்த சோதனை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் தொழிலதிபா் ரமேஷ் துஹாா் வீட்டிலும் நடைபெற்றது.

இதேபோல, எழும்பூா் மாா்ஷல் சாலையில் ரமேஷ் துஹாா் நடத்தும் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களிலும், தியாகராயநகரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும், ஒரு வா்த்தக சங்கத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத் துறையினா் கூற மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com