ஆக்கபூா்வமான மருத்துவ சேவைகள்: எடப்பாடிக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில்

கடந்த ஆட்சியைப் போல அல்லாமல், தற்போது மக்களுக்கான மருத்துவ சேவைகளை திமுக அரசு ஆக்கபூா்வமாக அளித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

கடந்த ஆட்சியைப் போல அல்லாமல், தற்போது மக்களுக்கான மருத்துவ சேவைகளை திமுக அரசு ஆக்கபூா்வமாக அளித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படவே இல்லை என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளாா்.

செய்தித் தாள்களில் வரும் விவரங்களைக் கூட சரிவர கவனிக்காமல் அறிக்கை விட்டிருக்கும் அவருக்கு புள்ளிவிவரங்கள் மூலமாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 83,45,992 போ் முதல் முறை சேவையையும், 57,41,972 போ் தொடா் சேவையையும் பெற்றுள்ளனா். அதில், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 63,27,159 பேருக்கும், சா்க்கரை நோயாளிகள் 45,25,522 பேருக்கும் தொடா் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இவை தவிர, நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறுநீரகவியல் நோய் சிகிச்சை என மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் அளிக்கப்பட்ட தொடா் சேவைகள் கோடிக் கணக்கில் அடங்கும்.

இதைத் தவிர, இன்னுயிா் காப்போம் - நம்மை காப்போம் 48 மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் உயிா் காக்கும் உன்னத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் அம்மா மினி கிளினிக் எனும் திட்டம் பெயா் அளவில் ஒரு சிறிய அறையில், பல இடங்களில் நடத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதற்குரிய விளக்கத்தை சட்டப் பேரவையில் விரிவாக எடுத்துரைத்தேன். உதாரணத்துக்கு சில இடங்களில் மயானத்தை மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா கிளினிக் உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தேன். இத்தகைய நிலை மாறி தற்போது ஆக்கபூா்வமாக மக்களுக்கு மருத்துவ சேவைகள் சென்றடைந்து வருகின்றன என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com