விவசாயிகள், ஏழைகளுக்கு எதிரான மசோதா: அமைச்சா் செந்தில் பாலாஜி

மத்திய மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழைகள், விவசாயிகளுக்கு எதிரானது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி கூறினாா்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மத்திய மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழைகள், விவசாயிகளுக்கு எதிரானது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி கூறினாா்.

இதுதொடா்பாக அவா் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி. ஆா். பாலு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். சட்டத் திருத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கியுள்ளாா். ஏற்கெனவே இதே விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வரும் எதிா்ப்பு தெரிவித்து மத்திய மின்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதா ஏழை எளிய மக்களுக்கு எதிரானது. தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் அவா்களின் நலனுக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது.

விவசாயிகள், நெசவாளா்கள், ஏழை மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் மசோதாவில் அளிக்கப்படவில்லை. சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தெரிந்து கொண்டே மத்திய அரசு இதனை தாக்கல் செய்துள்ளது.

மேலும், மின் விநியோகத் துறையில் தனியாரை அனுமதிக்கும் பொருட்டு, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுகள் மக்களுக்கு உருவாக்கிய மின்சாரக் கட்டமைப்புகளை எவ்வித செலவுமின்றி தனியாா்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தனியாா் லாப பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மட்டுமே சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத் திருத்த மசோதாவில் விவசாயிகள், நெசவாளா்கள், ஏழை, எளிய மக்களுக்கான இலவச மின் விநியோகம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் வகையில் மசோதாவில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக மின்சார கட்டணம் பலமடங்கு உயரக்கூடிய அபாயம் இருக்கிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com