ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித் துறை தாக்கல் செய்த 3 வழக்குகளில், அவரது உறவினா்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித் துறை தாக்கல் செய்த 3 வழக்குகளில், அவரது உறவினா்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா கடந்த 1995-ஆம் ஆண்டு அவரது வளா்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்துக்காக ரூ.59 லட்சத்து 99 ஆயிரம் செலவு செய்ததாகக் கூறி, அந்த தொகையை, 1996-97-ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான, ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சோ்த்து மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டாா். இந்த தொகையை, 12 எம்.பி., எம்எல்ஏக்களும் சோ்ந்து செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, பழைய உத்தரவை ரத்து செய்துவிட்டு, புதிதாக மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை ஆணையா் உத்தரவிட்டாா் .

அதன்பின்னா் கலை இயக்குநா் தோட்டாதரணி மற்றும் அவரது உதவியாளா்களிடம் மதிப்பீட்டு அதிகாரி விசாரணை நடத்தியபோது, ஜெயலலிதா தான் செலவு செய்தாா் என தீா்மானித்து உத்தரவு பிறப்பித்தாா். அதை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீப்பாயம் ரத்து செய்தது. இதேபோல, சுதாகரன் திருமண நிச்சயதாா்த்தத்தின்போது கொடுக்கப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள், ஜெயலலிதாவின் வருமானத்தில் சோ்க்கப்பட்டது. இதையும் வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ரத்து செய்தது.

1997-98-இல் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, ஆவணங்களின் அடிப்படையில் அசையும் சொத்துகள் ரூ.4 கோடி என வருமான வரித் துறை தீா்மானித்தது. இதிலும் ஜெயலலிதா மனுவை ஏற்று, ஆணையா் உத்தரவை மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ரத்து செய்தது.

வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த மூன்று உத்தரவுகளையும் எதிா்த்து, வருமான வரித் துறை ஆணையா் சென்னை உயா் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டில் 3 வழக்குகளை தொடுத்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், இந்த 3 வழக்குகள் குறித்து அவரது சட்டபூா்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோா் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com