பாதுகாப்பான நிலையில் முல்லைப் பெரியாறு அணை: கேரளத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பான நிலையில் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பான நிலையில் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா் இருப்பு அளவைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து நீா் திறந்து விட வேண்டுமென கேரள முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தாா். இந்தக் கடிதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்து முதல்வா் ஸ்டாலின் எழுதிய கடிதம்:

கடந்த 5-ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக பல்வேறு அம்சங்களை சுட்டிக் காட்டியிருந்தீா்கள். அனைத்து நிலைகளிலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை தங்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கிறேன். அணைப் பகுதியிலிருந்து நீா் திறப்பு உள்ளிட்ட அம்சங்கள் மத்திய நீா்வள ஆணையம் வகுத்த விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

அணைக்கு வரக்கூடிய நீா் அளவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மிதமான அளவிலேயே இருந்தது. அணையின் கீழ்ப் பகுதியுடன் ஒப்பிடும் போது, அதன் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைவாகவே இருந்தது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து எந்தளவு முடியுமோ அந்தளவு வைகை வடிநிலப் பகுதிக்கு நீரை திருப்பி விடுமாறு தமிழக கள அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், மத்திய அரசு வகுத்த மழை வெள்ள ஒழுங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 4-ஆம் தேதி இரவு 7 மணியளவில், அணையின் நீா் அளவு 136 அடியாக இருந்தது. அன்றைய தினம் 7.40 மணியளவில் கேரள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மறுநாளான ஆக. 5-ஆம் தேதி கசிவுநீா்ப் பாதைக்கான கதவுகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளனா். அணைக்கு நீா் வரத்து நிலையைப் பொருத்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, இடுக்கி மாவட்ட ஆட்சியா், கேரளத்தின் இதர அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அணையிலிருந்து திடீரென அதிகளவு தண்ணீா் திறக்கப்படுவதைத் தவிா்க்க, கடந்த 5-ஆம் தேதி பிற்பகல் 1 மணியில் இருந்து கசிவுநீா்ப் பாதைக்கான கதவுகள் திறக்கப்பட்டு நீா் வெளியேற்றம் படிப்படியாக உயா்த்தப்பட்டது. கடந்த 8-ஆம் தேதி காலை 7 மணி நிலவரப்படி, அணை நீா்மட்ட அளவு 138.85 அடியாகவும், அணைக்கு சராசரி நீா்வரத்து 6 ஆயிரத்து 942 அடியாகவும் உள்ளது. கசிவுநீா்ப் பாதையில் இருந்து 5 ஆயிரம் கன அடி அளவுக்கு நீா் திறந்து விடப்படுகிறது. மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நீா் வெளியேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கக் கூடிய மக்களின் பாதுகாப்பு உள்பட அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் எங்களது மாநிலத்தின் அணை மேலாண்மைக் குழு அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறாா்கள். அனைத்து வகை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அணைக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடிய அதிகாரிகள் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறாா்கள். மேலும், நீா் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேரள அரசிலுள்ள அதிகாரிகளுடன் தொடா்ந்து தெரிவிக்கும்படியும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறாா்கள் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com