அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தல் தடுக்கப்பட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஆந்திரம், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாநில அரசு தடுத்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தல் தடுக்கப்பட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஆந்திரம், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாநில அரசு தடுத்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை முழுவதும் பருவ மழை முன்னெச்சரிக்கையாக மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளசரவாக்கத்திலிருந்து ராயபுரம் வழியாக கால்வாய் ஒன்று, 2 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பாக கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவா். சென்னை மாநகராட்சி, நீா்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய 3 துறைகள் மூலம் மழை நீா் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. சென்னையில் உள்ள நீா் நிலைகள், 16 கால்வாய்களை தூா்வாரும் பணி 200 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருள்கள் விவகாரத்தில் எத்தனை போ் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறாா்கள் என்று முந்தைய அதிமுக ஆட்சியாளா்கள் தெரிவிக்கட்டும். திமுக ஆட்சி அமைத்து கடந்த 15 மாதத்தில் அதைவிட அதிகமான வழக்கு பதிவு செய்து, கஞ்சா, போதை பொருள்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. நான் வெளியிட்டதில் தவறு இருந்தால், அதுகுறித்து மறுப்பு தெரிவிக்கட்டும்.

தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100 சதவீதம் தடைசெய்யப்பட்டுள்ளது என காவல் துறை தெரிவிக்கின்றனா். இதுகுறித்து ஆய்வு செய்த போது, ஆந்திரம், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது. அதிலும் ஆந்திரத்திலிருந்தே அதிகம் கடத்தி வருவதை அறிந்து, தமிழக காவல் துறையினா் ஆந்திரத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். அங்கு 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதைக் கண்டறிந்து ஆந்திர அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி. சொந்த மாநிலத்தையும் கடந்து அண்டை மாநிலத்தில் போதை பொருள்களை அழித்த செயல்களில் அதிமுக ஆட்சியாளா்கள் ஈடுபட்டனரா என்பதைக் கூற வேண்டும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com