ஒரு யூனிட் கூட வீணாகவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரம், சூரிய மின் சக்தி, காற்றாலை மூலம் பெறப்பட்ட மின் உற்பத்தி இந்த ஆண்டு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
ஒரு யூனிட் கூட வீணாகவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி
ஒரு யூனிட் கூட வீணாகவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: மின்சாரம், சூரிய மின் சக்தி, காற்றாலை மூலம் பெறப்பட்ட மின் உற்பத்தி இந்த ஆண்டு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மின்சாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மின்சார வாரியத்தின் சார்பில் முடிக்கப்பட்ட பணிகளான 16 துணை மின் நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் இயக்கத்தினை தொடங்கி வைத்தார்கள். அதன் பிறகு, மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனை மற்றும் உத்தரவுகளை வழங்கினார்கள். முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தில் பத்து இலட்சத்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, அதில் 99 சதவீதம் புகார்களுக்கான தீர்வுகள் உடனுக்குடன் காணப்பட்டுள்ளன. முதல்வர் நேற்று (16.08.2022) நேரில் மின்னகத்திற்கு வருகை தந்து 10 இலட்சமாவது புகார் தெரிவித்த நபருடன் தொடர்பு கொண்டு பேசி அதனுடைய நடவடிக்கை குறித்து கேட்டறிந்து, அதன்பிறகு மின்னகத்திற்கு வரப்பெற்ற புகார்களையும் தொலை பேசியில் பேசி அந்த புகார் குறித்து கேட்டறிந்தார்.

மிக விரைவாக போர்க்கால அடிப்படையில் புகார்களுக்கு தீர்வு காணப்படுவது பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறக்கூடிய மின்சார வாரிய பணிகளை விரைவுபடுத்த வேண்டும், வரக்கூடிய புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், ஒரு செயற் பொறியாளரும்,  தமிழக அமைச்சர்களின் தொகுதிக்கு ஒரு மேற்பார்வை பொறியாளர் என சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு புதிய திட்டங்களின் செயல்பாடுகள், அதை விரைவாக முடிப்பது குறித்த ஆலோசனைகள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், சிறப்பு அதிகாரிகள் தொகுதிகள் முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மக்களிடம் கலந்து பேசி மின்சார விநியோகம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் பில்லர் பாக்ஸ்கள், கிராமப்புறங்களில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் துணைமின் நிலையங்களை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த பகுதிகளிலுள்ள மக்களுடன் கலந்து பேசி எந்த அளவிற்கு மின்விநியோகம் இருக்கின்றன, இன்னும் எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் கேட்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த வருடம் ஏறத்தாழ 2,300 கோடி அளவிற்கான திட்டபணிகள் நடந்து கொண்டிருக்கிறது, அதையும் விரைவுபடுத்தி துரிதமாக வேலைகளை முடிக்க வேண்டும், பணிகள் விரைவாக நடைபெறுவதற்காக தொகுதி வாரியாக குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று வித்தியாசம் பார்க்காமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து, நடைபெறக்கூடிய மின்சார வாரிய பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும், முடிவுற்ற பணிகளை இயக்கத்திற்கு கொண்டுவர அவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும், மின்சார வாரியம் சார்பாக எடுக்க மற்றும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகள் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை ஓராண்டில் 28,085 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் குறித்த தொலைநோக்குப் பார்வையோடு விரைவாக முடித்திட, அவரது வழிகாட்டுதலின்படி இந்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம், சூரிய மின் சக்தி, காற்றாலை மூலம் பெறப்பட்ட மின் உற்பத்தி இந்த ஆண்டு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சூரிய மின் சக்தி, காற்றாலை மின் உற்பத்தியாளர்களை சந்தித்தபோது மின்சார வாரிய வரலாற்றிலேயே இந்த ஆண்டில் தான் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். ஒரு யூனிட் கூட வீணாகவில்லை என்றனர்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, பணிகள் மின்சார வாரிய ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து நடைபெற்று வருகின்றன. முதல்வரின் சீர்திருத்த நடவபடிக்கைகளால் மின்சார வாரியத்திற்கு கடந்த வருடம் 2,200 கோடி அளவிற்கு வட்டி மற்றும் இதர இனங்கல் மூலம் சேமிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, கடந்த ஆண்டுகளைப் போல் கடன் அதிகரிக்காமல் இருப்பதற்கு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இலவச திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்களுடன் கரம்கோர்த்து அவர்களுடைய வாழ்க்கை தரத்தினை உயர்நிலைக்கு அழைத்து செல்வதற்காகத்தான் செயல்பட்டுவருகின்றன. சாதாரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவபவர்களுக்கு இலவச திட்டங்களே இருக்கக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. விவசாயிகளின் வாழ்க்கையில் என்ன மிச்சம் பண்ண முடியும்.

உற்பத்தி பொருள் அதிகமானால் பொருள் குறைந்தால், விலை அதிகரிக்கும். அவர்களுடைய முதலீட்டிற்கும், கடைசியாக இருக்கக்கூடிய வருமானத்தையும் பார்க்கும்போது மிகப் பெரிய இழப்பை சந்திக்ககூடிய நிலை இருக்கும். அதனால் தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் திட்டத்தினை கொண்டு வந்தார்கள். முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பினை வழங்கினார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும். ஆனால், ஒன்றிய அரசை பொறுத்தவரை இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 

முதல்வரை பொறுத்தவரை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச திட்டங்கள் உறுதியாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஏற்கெனவே சட்டமன்றத்தில் 3 கோவில்களின் தேரோடும் வீதிகளில் புதைவட கம்பிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் உள்ள பார்சன்வேலி குடிநீர் திட்டத்திற்காக புதைவட கம்பிகள் அமைக்க கோரியுள்ளனர். நீலகிரியில் மரங்கள் அடிக்கடி சாய்வதினால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. அதற்கான திட்ட மதிப்பீட்டினை தயாரித்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும். சென்ற இரு வாரங்களுக்கு மேல் மழை பெய்ததால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி, 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொணடார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com