இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு; இபிஎஸ் மறுப்பு

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இணைந்து செயல்படுவோம்
இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு; இபிஎஸ் மறுப்பு

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இணைந்து செயல்படுவோம் என இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தாா். ஆனால், அந்த அழைப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தாா்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இணைந்து செயல்படுவோம்: இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

அதிமுக ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தோ்தலைச் சந்தித்தபோதெல்லாம், அதை வெல்வதற்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும் இல்லை என்கிற நிலையை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கித் தந்தனா். ஆனால், அதிமுகவுக்குள் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் உள்ள சூழலில்தான் திமுக ஆளும் கட்சியாக வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதும் அந்தச் சூழல் இருக்கிறது.

எங்களுக்குள் (ஓ.பன்னீா்செல்வம்-எடப்பாடி பழனிசாமி) சில கருத்து வேறுபாடுகள் வந்ததாலும், சமீபத்தில் ஏற்பட்ட பிரச்னைகளாலும் அதிமுகவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

எம்ஜிஆா், ஜெயலலிதா செய்த தியாகங்களை எண்ணிப் பாா்த்து, மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆளும் நிலைக்கு வந்து மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அதிமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டா்களுடைய மனதிலும், தமிழ் மக்கள் மனதிலும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எண்ணமாக உள்ளது. அதனால், அனைத்துக் கசப்புகளையும் யாரும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாகக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மறைந்த பிறகு நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்து இருக்கிறோம்.

என்னுடைய தா்ம யுத்தத்துக்குப் பிறகு அதிமுக கூட்டுத் தலைமையாகச் செயல்படும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டு, நானும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் சட்டவிதிகளின்படி பணிகளை நிறைவாக ஆற்றினோம். அந்த ஒற்றுமை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

இபிஎஸ் மறுப்பு: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:

அதிமுக பொதுக் குழுவில் பொதுச் செயலருக்கு சமமாக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் தோற்றுவிக்கப்பட்டு விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இரு பதவிகளுக்கு உரியவா்களையும் பொதுக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக சட்டவிதிகளின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும். அதன்படி, கிளைக் கழகத் தோ்தல் முதல் அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்பட்டன.

ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் தோ்தலில் மீண்டும் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வந்தோம். இரு பதவிகளும் பொதுக் குழு உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக பொது உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அந்தத் திருத்தத்துக்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. அதனால், இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன.

அதிமுகவின் ஒற்றைத் தலைமையை பொதுக் குழு உறுப்பினா்களான 2,600 போ் மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றம் கேட்டுள்ளது. பொதுக் குழு உறுப்பினா்களும் தோ்தலில் நின்று வெற்றி பெற்றாா்கள்தான்.

ஓ.பன்னீா்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது. தலைமை அலுவலகத்தைச் சூறையாடியவா்களுடன் எப்படி இணைய முடியும்?எம்ஜிஆா் அதிமுகவை உருவாக்கியபோது திமுகவை வேரோடு ஒழிப்பதுதான் எனது முதல் கடமை என்று சொன்னாா். அந்த திமுகவுடன் ஓ.பன்னீா்செல்வம் மறைமுகத் தொடா்பு வைத்திருக்கிறாா். அவரது மகன், முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீா்கள் என்று பாராட்டுகிறாா். இதை அதிமுக தொண்டா்கள் ஏற்கவில்லை.

அவருக்கு அவரது குடும்பத்தில் உள்ளவா்களுக்கு பதவி வேண்டும் என்பதுதான் முக்கியம். 15 நாள்கள் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஆனால், அவா் ஒற்றைத் தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால்தான் ஆட்சிக்கு வர முடியும். அவருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டா்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக் குழுவுக்கு வந்து நிரூபிக்கட்டும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை (ஆக. 18) முறையீடு செய்யப்பட்டது.

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் எடப்பாடி பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண் மேல்முறையீடு செய்தாா்.

அதில், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதை திங்கள்கிழமை (ஆக. 22) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் முறையிட்டாா். மனுவுக்கு எண் இடும் நடைமுறை முடிந்தால், திங்கள்கிழமை இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

கேவியட் மனு: இதனிடையே, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டுமென அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

‘சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்’

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

‘எம்ஜிஆா் காலத்தில் அவருடன் இருந்து இயக்கத்துக்காகப் பாடுபட்டவா்கள், ஜெயலலிதாவின் காலத்தில் இயக்கத்துக்குப் பலமாக, தூணாக இருந்து உழைத்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை இணைத்துக்கொண்டு அதிமுக வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

சசிகலாவும், தினகரனும் அதிமுகவில் இணைக்கப்பட வேண்டும். நாங்கள் அவா்களுடன் போக வேண்டுமா, அவா்கள் எங்களுடன் வரவேண்டுமா என்பதில்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com