தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; விசாரணை அறிக்கையை அதிகாரபூா்வமாகஅரசு வெளியிட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு அதிகாரபூா்வமாக உடனடியாக வெளியிட வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு அதிகாரபூா்வமாக உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஸ்டொ்லைட் ஆலை போராட்டத்தின்போது நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022, மே மாதம் 18-இல் தமிழக முதல்வரிடம் சமா்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.

இந்த நிலையில், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக பல முக்கிய விஷயங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அதில் ஸ்டொ்லைட் நிா்வாகத்துக்கு ஆதரவாகவும், சட்டத்தைப் பின்பற்றாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் காவல் துறையினா் வன்மத்தோடு பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனா் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்வது குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால், நீதிபதி அருணா ஜெகதீசன் சமா்ப்பித்துள்ள முழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, குற்றமிழைத்த காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com