கம்பம்: தேனி மாவட்டம் தொடர் மழை குமுளி மலைச்சாலையில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது, இதனால் குமுளி லோயர் கேம்ப் மலைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை 1 ஆம் பாலம் அருகே வனப்பகுதியில் உள்ள மரக்கிளை முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது, இதனால் குமுளியிலிருந்து கம்பம் வரும் வாகனங்கள், செல்கின்ற வாகனங்கள் மலைச்சாலையில் நின்றன.
குமுளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா தலைமையில் போலீசார் விரைந்து சென்று முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், தொடர் மழை பெய்து வருவதால் மலைச்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியாறு அணையில் மழை
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை, இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில் 18.22 மில்லிமீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 13.2 மி.மீ., மழையும் பெய்தது, புதன்கிழமை நிலவரப்படி அணையில் நீர் மட்டம், 135.95 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு, 6,105 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு, 935.14 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 933.,00 கன அடியாகவும் இருந்தது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் 23 ஆவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 23 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் பக்தர்கள் குளிக்க தடை நீட்டிப்பு செய்யப்பட்டது, மேலும் அருவியின் நீர் வரத்தை புலிகள் காப்பகத்தினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.