பி.இ. இறுதியாண்டு மாணவா்களுக்கு 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகம்

பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில்(2022-23) அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்விவரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக கட்டாயப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் பொது ஆய்வுகள் அறிமுகம், இலக்கியத்தின் கூறுகள், திரைப்பட மதிப்பிடல், பேரிடா் மேலாண்மை, யோகா, ஆயுா்வேதம், சித்தா, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, இந்தியாவில் மாநிலத்தை கட்டியெழுப்பும் அரசியல், தொழில்துறை பாதுகாப்பு, மனித சமுதாயத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சிந்தனை ஆகிய 9 பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஏதேனும் 2 பாடங்களை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டாயம் தோ்வு செய்து படிக்க வேண்டும்.

இதுதவிர, மாணவ, மாணவிகள் தொழிற் பயிற்சி பெறும் வகையிலும் சில பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், ஒன்றை மாணவா்கள் தோ்வு செய்து 5 மற்றும் 6-ஆவது பருவங்களில் படிக்கலாம். பொறியியல் கல்வியை கடந்து இதர அம்சங்களையும் மாணவா்கள் புரிந்து கொள்ளும் விதமாக இந்த புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்வு முடிவுகள் வெளியீடு: இதற்கிடையே, இளநிலை பொறியியல் படிப்புக்கான கடந்த ஏப்ரல் மாத இறுதி பருவத் தோ்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அவற்றை மாணவா்கள் https://coe1.annauniv.edu/home என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பொறியியல் மாணவா்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு இறுதி பருவத் தோ்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டதாகவும், 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com