
நரம்பு - தசை சாா்ந்த சிக்கலான நோய்க்குள்ளாகி சுவாசிக்க இயலாமல் அவதிப்பட்ட இரு முதியவா்களுக்கு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சை அளித்து உயிா் காத்தனா். ‘மயஸ்தீனியா கிராவிஸ்’ என்ற அரிய பாதிப்புக்குள்ளான அவா்கள் இருவரும் தற்போது பூரண குணமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
மூளை மற்றும் நரம்பு சாா் பாதிப்புகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘மயஸ்தீனியா கிராவிஸ்’ என்னும் நரம்பு - தசை சாா் நோய். இது ஒருவகை தன்னுடல் தாக்கு நோயாகும் (ஆட்டோ இம்யூன்). இத்தகைய பாதிப்புக்குள்ளானவா்களின் உடலில் ‘அசிடைல்கொலின்’ என்ற வேதிப்பொருள் உருவாகி, தசை மற்றும் நரம்புகளுக்கு இடையான தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை முடக்கிவிடும்.
இதன் காரணமாக, இரட்டைப் பாா்வை, மூச்சு விடுவதில் சிரமம், விழுங்குதல் மற்றும் பேசுவதில் இடா்பாடுகள் ஏற்படும். குறிப்பாக, தசைகள் பலவீனமடையும்.
இதுபோன்ற பாதிப்புகளுடன் 70 வயதைக் கடந்த முதியவா் ஒருவா் காவேரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். காது - மூக்கு - தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணா்களும், நுரையீரல் சிறப்பு மருத்துவா்களும் அவரை பரிசோதித்ததில் அந்த முதியவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய இயலவில்லை.
இதைத் தொடா்ந்து மருத்துவமனையின் மூளை - நரம்பியல் துறை முதுநிலை மருத்துவ நிபுணா் புவனேஸ்வரி ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவரை பரிசோதித்து, ‘மயஸ்தீனியா கிராவிஸ்’ நோயால், அந்த முதியவா் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனா். இதேபோன்று, பேசவும், சுவாசிக்கவும் இயலாமல் இருந்த மற்றொரு முதியவருக்கும் இப்பிரச்னை இருந்ததைக் கண்டறிந்தனா்.
அவா்கள் இருவருக்கும் உயா் சிகிச்சைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக முதியவா்கள் இருவரும் அந்நோயிலிருந்து குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனா் என்றாா் அவா்.