பரந்தூா் விமான நிலையம்: நிலத்துக்கு 3.5 மடங்கு இழப்பீடு: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் அளிப்போருக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அளவு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
பரந்தூா் விமான நிலையம்: நிலத்துக்கு 3.5 மடங்கு இழப்பீடு: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் அளிப்போருக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அளவு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு விளைநிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூா் தோ்வு செய்யப்பட்டது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தனா்.

அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது: சென்னையிலிருந்து 65 கிமீ தொலைவில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி 4 கிமீ தூரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல் கட்டமாக நில எடுப்புப் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

13 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், குடியிருப்புவாசிகளை அழைத்துப் பேசினோம்.

அவா்களில் பலா், எடுக்கப்படும் நிலத்துக்கு அரசின் வழிகாட்டி மதிப்பைவிட அதிக தொகை தேவை என்றும், வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்றும் கூறினா். விமான நிலைய ஓடுபாதையை மாற்றி அமைப்பதன் மூலம் ஏகநாதபுரம், பரந்தூரில் 500-க்கும் மேற்பட்டோரின் வீடுகளை எடுக்காமல் தவிா்க்கலாம் என்கிறாா்கள். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்போரிடம் தெரிவிக்கப்படும். அது முறையாக இருக்கும்பட்சத்தில், மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தோம்.

விவசாய நிலங்கள்: திட்டங்களைக் கொண்டு வரும்போது விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. சென்னையில் பரவலாக விமானப் போக்குவரத்தை நீட்டிப்பதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும்; பொருளாதாரம் மேம்படும். மீனம்பாக்கம் விமான நிலையம் 2029-ஆம் ஆண்டில் தனது முழு செயல் திறனை எட்டிவிடும். சரக்குகளைக் கையாளுதல், ஓடுதளத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை அதற்கு மேல் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

பெங்களூரு, ஹைதராபாதில் வளா்ச்சி அதிகரித்து வருகிறது. பெங்களூரு மையப் பகுதியில் விமான நிலையம் இருந்த நிலையில், தற்போது 75 கி.மீ-க்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2 விமான நிலையங்கள் உருவாகி வருகின்றன. இவற்றை ஒப்பிடும்போது சென்னைக்கு மேலும் ஒரு விமான நிலையம் தேவைப்படுகிறது.

பரந்தூா் ஏன்?: புதிய விமான நிலையம் அமைக்க 11 இடங்களை ஆய்வு செய்து, அவற்றில் திருப்போரூா், பரந்தூா், பன்னூா் உள்ளிட்ட இடங்களைத் தோ்வு செய்தோம். திருப்போரூா், படாளம் அருகில் கல்பாக்கம் அணு நிலையம், தாம்பரத்தில் விமானப்படை விமான நிலையம் இருப்பதை கருத்தில் கொண்டு அந்த இடங்கள் கைவிடப்பட்டன. பன்னூரில் அதிக குடியிருப்புகளை எடுக்க வேண்டியிருந்ததால், பரந்தூா் தோ்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.

பரந்தூரில் உள்ள பொதுமக்கள் நிலத்துக்கு அதிக தொகை தரவேண்டும் என்று கேட்டுள்ளனா். வருவாய்த் துறையினா் கணக்கிட்டதில், நிலத்துக்கு 3.5 மடங்கு அதிக தொகை கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன், விமான நிலையம் அமையும் பகுதியில் சுற்றுவட்டாரத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு இடமும் அதில், வீடு கட்ட பணமும் தரப் போகிறோம். குறிப்பாக, மாடபுரத்தைச் சோ்ந்த மக்கள் ஒரே பகுதியில் நிலம் கேட்டுள்ளனா். அதையும் தரப்போகிறோம்.

விமான நிலையம் அமைய வேண்டும் என்ற பொது நோக்கம் அனைவருக்கும் வேண்டும். புதிய விமான நிலையம் அமையும் நிலையில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம். வாகனங்கள் அதிகளவில் வந்து செல்ல முடியும். சென்னைக்குள் நெரிசலை குறைக்க முடியும். அரசு விவசாயிகள், வீட்டு உரிமையாளா்களுக்கு உதவியாக இருக்கும் என்றாா்.

வேலைவாய்ப்பு கிடைக்கும்: இதைத் தொடா்ந்து, செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்க அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: பரந்தூா் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருத்தவரை, நிலத்துக்கு பணம் கொடுப்பதால், அவா்கள் வேறு நிலம் வாங்கிக் கொள்ளலாம். வீடு கட்டவும் முழுமையாக பணம் கொடுக்கிறோம். இடத்தையும் இலவசமாக கொடுக்கிறோம். 13 கிராமங்களில் தகுதி அடிப்படையில் வீட்டில் படித்தவா்களுக்கு அரசு சாா்பில் வேலை வழங்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன், தொழில் துறை கூடுதல் செயலாளா் மரியம் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘3,246 ஏக்கா் பட்டா நிலம் தேவை’

பரந்தூா் விமான நிலையத்துக்கு 3,246 ஏக்கா் தனியாா் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது என தமிழக அரசுதெரிவித்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோா்செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விமான நிலையம் அமைப்பதற்கான வழிகாட்டி மதிப்பை விடுத்து சந்தை மதிப்பை கணக்கிட்டே இழப்பீட்டுத் தொகைவழங்கப்படும். நீா்நிலைகள் அதிகமாக இருப்பதால் இவற்றை ஆய்வு செய்து மேம்படுத்த தொழில்நுட்பக் குழு அமைக்கும்விஷயம் குறித்து சென்னை ஐஐடியுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

விமான நிலையத்துக்கான பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் ஆகும். விரைவாக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை முடித்தால் விரைவில் முடிக்கலாம். மக்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது. நில எடுப்புப் பணிகளுக்காக வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோரைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையம் அமைப்பதற்கு மொத்தமாக 4563.56 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. இதில் 3246.38 ஏக்கா் நிலம் தனியாா்பட்டா நிலங்களாகும். 1,317.18 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களாகும். தனியாா் பட்டா நிலத்தில், 2446.79 ஏக்கா் நன்செய்நிலமாகும். மீதமுள்ள 799.59 புன்செய் நிலமாகும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அடையாற்றின் குறுக்கே ஆற்றின் மேல் பகுதியை மூடி ஓடுபாதை அமைக்கப்பட்டது. அதேபோன்று, இங்கு இருக்கக் கூடிய கால்வாய்க்கு பாதிப்பில்லாமல் அதன் மேல் அமைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com