
கோப்புப் பட்ம்
ஆவின் பால் மற்றும் அதுசாா்ந்த பொருள்களை நெகிழிகளில் (பிளாஸ்டிக்) அடைத்து விற்க உணவுப் பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக உயா் நீதிமன்றத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்தாா்.
தமிழகத்தில் நெகிழிப் பொருள்கள் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் தரப்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உணவுப் பாதுகாப்பு விதிகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்களை கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆவின் நிறுவனம் நெகிழிப் பைகளை பயன்படுத்துகிறது.
குடிநீா் பாட்டில்கள் பயன்பாட்டை தவிா்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீா் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம். மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிகளைப் பயன்படுத்தியதற்காக ரூ. 33.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியதாக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், குடிநீா் உற்பத்தி நிறுவனங்கள் மீது 384 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 27.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 363 உரிமையியல் வழக்குகளில் ரூ. 54.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளா்களுக்கு எதிராக 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1.79 லட்சம் அபராதமும், 492 உரிமையியல் வழக்குகளில் ரூ. 61.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.