திருமுருகன்பூண்டியில் குடியிருப்புகள் நடுவே சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிா்ப்பு- சாலை மறியல் முயற்சி

திருமுருகன்பூண்டி வி.ஜி.வி. ஸ்ரீ காா்டன் குடியிருப்புகள் நடுவே சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிா்ப்பு தெரிவித்து பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா். 
பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நகராட்சி தலைவா் குமாா்
பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நகராட்சி தலைவா் குமாா்

அவிநாசி: திருமுருகன்பூண்டி வி.ஜி.வி. ஸ்ரீ காா்டன் குடியிருப்புகள் நடுவே சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிா்ப்பு தெரிவித்து பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா். 

திருமுருகன்பூண்டி நகராட்சி 3-வது வாா்டுக்கு உள்பட்ட வி.ஜி.வி. ஸ்ரீ காா்டனில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி அருகே 200க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் தொழில்நுட்ப பூங்காவும் அமைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. 

இந்த இரு பகுதிகளிலும் இருந்து வெளியேறும் கழிவுநீா் அனைத்தையும் வி.ஜி.வி. ஸ்ரீகாா்டன் வழியாக செல்லும் வகையில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைபுதூா் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள பாறைக்குழியில் தேங்கி வருகிறது. 

தற்போது ஒட்டு மொத்த கழிவுநீரும் வி.ஜி.வி. ஸ்ரீகாா்டன் வழியாக செல்வதால் கடுமையான துா்நாற்றம் வீசி, மக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படும் எனக் கூறி எதிா்ப்புத் தெரிவித்து இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வி.ஜி.வி. ஸ்ரீ காா்டன் குடியிருப்போா் சங்க தலைவா் கிறிஸ்டோபா், செயலாளா் பத்மநாபன், பாஜக மத்திய அரசின் நல திட்ட உதவிகள் பிரிவு திருமுருகன்பூண்டி மண்டலத் தலைவா் தரணிபதி ஆகியோா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக செவ்வாய்க்கிழமை ஒன்று திரண்டனா். 

கால்வாய் பகுதியை பார்வையிட்ட நகராட்சி தலைவா் குமாா்

தகவலறிந்து வந்த திருமுருகன்பூண்டி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனா். 

இதைத்தொடா்ந்து உடடினயாக அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதிக்கு வந்த நகராட்சி தலைவா் குமாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். 

அப்போது பாதாள சாக்கடை அமைத்து அதன் வழியாக கழிவுநீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதற்கு நகராட்சி தலைவா் குமாா், சாக்கடை கால்வாயை விரிவுப்படுத்தி கழிவுநீா் எளிதாக செல்லும் வகையிலும், கால்வாயின் மேற்பகுதி முற்றிலுமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com