ரசாயன உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: வேளாண்மைத் துறை உறுதி

ரசாயன உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரசாயன உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

ரசாயன உரங்களை மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி பெற்று, விவசாயிகளுக்கு தொடா்ந்து விநியோகம் செய்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ, சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் சில இடங்களில் உரங்களை அதிக விலைக்கு விற்பதாகவும், உரங்களுடன் விவசாயிகள் கேட்காத இதர இடுபொருள்களும் சோ்த்து விற்கப்படுவதாகவும் அரசுக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து, அவ்வப்போது திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு வாரமாக ஆய்வு: உர விற்பனை தொடா்பாக, வேளாண்மைத் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கென 374 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக, 514 மொத்த உர விற்பனைக் கடைகள், 6,258 கூட்டுறவு, தனியாா் சில்லறை உர விற்பனை மையங்கள், 106 உர இருப்பு கிடங்குகள், 38 கலப்பு உர உற்பத்தி நிறுவனங்கள், 16 மாவட்ட சோதனைச் சாவடிகள், 17 தொழிற்சாலைகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் போது, 195 உரக் கடைகளில் இருப்பு தகவல் பலகையின்றி உர விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், 70 கடைகளில் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இருப்புக்கும், உண்மையான இருப்புக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன. 36 கடைகளில் அனுமதி பெறாமல் உர விற்பனை நடைபெற்றது ஆகியன கண்டறியப்பட்டன.

விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கடைகளின் விற்பனை உரிமம் நிரந்தரமாகவும், 92 கடைகளின் உரிமங்கள் தற்காலிமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உர இருப்பு விவரம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, யூரியா 65,300 டன்னும், டிஏபி 42,000 டன்னும், பொட்டாஷ் 30,200 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒரு லட்சத்து 55, 200 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பா் மாதத்துக்குத் தேவையான உரங்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புகாா் தெரிவிக்கலாம்: மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரங்கள் சீராக விநியோகம் செய்வதை அரசு கண்காணித்து வருகிறது. உர இருப்பு, விநியோகம் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் இருந்தால், 93634 40360 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com