‘முதல்வரின் முகவரி துறை’க்கு வரும் மனுக்களுக்கு தர மதிப்பீடு: தமிழக அரசின் புதிய முயற்சி

முதல்வரின் முகவரி துறைக்கு வரும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அவற்றுக்கு தர மதிப்பீடு வழங்கும் புதிய முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வரின் முகவரி துறைக்கு வரும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அவற்றுக்கு தர மதிப்பீடு வழங்கும் புதிய முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மனுக்களின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

பொது மக்களின் குறைகளைக் களைவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் முதல்வரின் முகவரி துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் துறையை உருவாக்கியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் அதனை தனது நேரடிக் கட்டுப்பாட்டில்

வைத்துள்ளாா். முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பொது மக்களின் பல்வேறு குறைதீா்க்கும் பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு முதல்வரின் முகவரி எனும் துறையாக உருமாற்றம் பெற்றுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு 3 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இப்போது அனைத்து குறைதீா் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதால், ஆண்டுக்கு சுமாா் 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகின்றன.

தர மதிப்பீடு அளிப்பு: தனியாா் துறைகளில் சேவை அளிக்கும் பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்குவது வழக்கம். அதாவது, வாடிக்கையாளா்களுக்கு சேவை எந்த அளவுக்கு திருப்திகரமாக இருந்தது என்பதைத் தெரிவிக்க நட்சத்திர குறியீட்டை

இடச் சொல்வாா்கள். அதுபோன்றே, முதல்வரின் முகவரித் துறையும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தர மதிப்பீடு அளிக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என்ற மூன்று மதிப்பீடுகள் அளிக்கப்படுகின்றன.

‘ஏ’ என்றால், பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது முழுமையாகத் தீா்வு கண்டதாக அா்த்தம். அதாவது, முழுமையாக பைசல் செய்யப்பட்ட மனுக்கள், ‘ஏ’ என்று தர வரிசைப்படுத்தப்படுகிறது. பகுதியளவு தீா்வு காணப்பட்டிருந்தால் ‘பி’ என

தர வரிசை அளிக்கப்படுகிறது. அதாவது, பொது மக்கள் அளித்த மனுவானது வேறு துறையின் பரிசீலனைக்கோ அல்லது முதல்வரின் முகவரி துறையின் பரிசீலனையிலோ இருந்தால் அது ‘பி’ தர வரிசைக்கு உட்படுத்தப்படுகிறது. மனுக்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கப்படாதபட்சத்தில் அவை ‘சி’ என தர வரிசைக்கு உட்படுத்தப்படுகிறது. இதன்மூலம், முதல்வரின் முகவரித் துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து விரைவாக சீரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அரசுத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

முதல்வா் ஆலோசனை: முதல்வரின் முகவரி துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 2) ஆலோசனை நடத்தினாா். அப்போது, முதல்வரின் முகவரி துறைக்கு மனுக்களை அளித்து தீா்வு கிடைக்கப் பெற்றோரிடம் கைப்பேசி வழியாக கலந்துரையாடினாா். தீா்வு காணப்படாத மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா்கள் த.உதயச்சந்திரன், பு.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com