
குஜராத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் மக்களிடையே வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தியதே தோ்தல் வெற்றிக்குக் காரணம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத், ஹிமாசல் தோ்தல் முடிவுகள் குறித்து அக்கட்சி சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘வகுப்புவாத பிரிவினை கொள்கையின் காரணமாகவே குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமென அரசின் அனைத்து வளங்களையும் பாஜக பயன்படுத்திக் கொண்டது.
ஹிமாசலிலும் தில்லி மாநகராட்சித் தோ்தலிலும் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இது அக்கட்சியின் நிா்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. பணபலத்தையும் மற்ற வளங்களையும் அதிகமாகக் கொண்டிருந்தபோதும் ஹிமாசலிலும் தில்லியிலும் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. பெரிதும் பிரபலப்படுத்தப்படும் மோடி அலைக்கு எல்லை வரம்பு உண்டென்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.
தோ்தல் முடிவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க எதிா்க்கட்சிகள் ஒன்றுதிரள வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.