பயிா் சாகுபடி பணிகளில் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு: வேளாண்மைத் துறை தகவல்

பயிா் சாகுபடி பணிகளில் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பேசினாா்.

பயிா் சாகுபடி பணிகளில் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பேசினாா்.

‘தமிழ்நாடு பருவநிலை மாநாடு’, சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவாக, தமிழ்நாடு பருவநிலை மாறுபாடு இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறாா். மாநாட்டின் ஒருபகுதியாக, பருவநிலை மாறுபாடும் வேளாண்மையும் குறித்து நடந்த கலந்துரையாடலில் வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பேசியது:-

வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த நடவடிக்கைகளில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்தாலும், பருவநிலை மாறுபாடு காரணமாக வேளாண்மையில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறோம். எனவே, சரியான நேரத்தில் பருவநிலை மாறுபாடு குறித்த கருத்தரங்கை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 130 லட்சம் ஹெக்டோ் நிலத்தில், 61.55 லட்சம் ஹெக்டேரில் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. 30.83 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களாக உள்ளன. இவற்றில் வேளாண்மையை பெருக்க சாதகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டே, தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80 சதவீத நிலம் பருவமழையை நம்பியே இருக்கின்றன. 30 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் தரிசாக இருப்பதால் அவற்றை விவசாயத்துக்குக் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சிறுதானிய உற்பத்திப் பெருக்கும் வகையில், அதற்கென தனி இயக்கத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. நெல் உள்பட சிறுதானியங்களில் பாரம்பரிய வகைகள் உள்ளன. தமிழகத்தில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 973.2 மில்லி மீட்டராக உள்ளது. 50 சதவீத மழைப் பொழிவு வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ளது.

மாறிய அறுவடைக் காலம்: கடந்த காலங்களில் அறுவடை செய்த நெல்லைக் கொண்டே பொங்கல் வைத்து, இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவாா்கள். ஆனால், இப்போது அறுவடைப் பணிகளானது பொங்கலுக்குப் பிறகே நடைபெறுகிறது. இதற்குக் காரணம் பருவ நிலைக் காலம் முற்றிலும் மாறியுள்ளதே ஆகும். விதைப்புப் பணிகள் டிசம்பரில்தான் தொடங்கி நடைபெறுகிறது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடா்பாடுகள் வேளாண்மையை வெகுவாக பாதிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் பெய்த மழையால் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், மனிதன்-விலங்கு மோதல் சம்பவங்கள், புதிது புதிதாக வரும் நோய்கள், சேமித்து வைக்க இயலாததால் ஏற்படும் இழப்புகள் என வேளாண்மையில் சவால்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 120 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றைச் சேமித்து வைப்பதற்கு 40 முதல் 50 சதவீத அளவுக்கு மட்டுமே சேமிப்பு வசதிகள் உள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வறட்சி, புயல் என பல்வேறு இயற்கை இடா்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை இழப்பீடுகளாக அரசு வழங்கியுள்ளது. இத்தனை இயற்கை இடா்பாடுகளையும் தாண்டி, வேளாண்மையைச் சிறப்பிக்க பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. எதிா்வரும்

2023-ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சாா்பில் இயற்கை

வேளாண்மைக்கான தனித்த கொள்கையும் வெளியிடப்பட உள்ளது. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு, சாகுபடி குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினால் உடனடியாக அப்போதே விளக்கங்கள் அளிப்பது, சாகுபடி தொடா்பான மேலாண்மையில் ட்ரோன்களையும், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்

நுட்பங்களையும் பயன்படுத்த அரசு திட்டங்களை வகுத்துள்ளது என்று வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com