இது விருதல்ல, பாரதியாரின் கனவு: "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்

இது விருதல்ல, பாரதியாரின் கனவு என்றார் தினமணி மகாகவி பாரதியார் விருது குறித்து "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

இது விருதல்ல, பாரதியாரின் கனவு என்றார் தினமணி மகாகவி பாரதியார் விருது குறித்து "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தினமணியின் "மகாகவி பாரதியார்' விருது வழங்கும் விழாவில் வரவேற்புரையாற்றி அவர் மேலும் பேசியது: 

"சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.க்குப் பிறகு பாரதி குறித்து பட்டிதொட்டி எங்கும் புகழ் பரப்பியவர் குமரி அனந்தன். அவரது வாரிசாக இருக்கின்ற ஆளுநர் தமிழிசை செüந்தரராஜனின் கையால் மகாகவி பாரதியார் விருது வழங்க இருப்பது மிகப் பொருத்தமானது. 

பாரதி பெயரில் விருது வழங்கும் தகுதி தினமணிக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், தினமணி தொடங்கப்பட்ட நாளில் அன்றைய ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய தலையங்கத்தில் "சுதந்திர பித்தரான பாரதியின் நினைவைப் போற்றும் வகையிலும், சுதந்திர வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் தினமணி தொடங்கப்படுவதாகக்' கூறியிருந்தார். அப்படி தொடங்கப்பட்ட தினமணியின் வழியில்தான் நாங்கள் இன்றும் நடக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா.

"தமிழர்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும். பாரதியின் எழுத்துகளால்தான் கம்பன் குறித்தும், வள்ளுவர் குறித்தும் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ் பேசுகிற, தமிழைச் சிந்திக்கிற அனைவருமே பாரதியாரின் வாரிசுகள்தான் ' என்பார் ஜெயகாந்தன். 
அத்தகைய சிறப்புமிக்க பாரதியாரின் வாரிசுகளாகிய நாம் ஆண்டுக்கு ஒருமுறை அவரின் பிறந்தநாளில் எட்டயபுரத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். 

பாரதிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு எழுத்தாளர் கல்கி வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்று மக்கள் நன்கொடை வழங்கினர். உலகத்திலேயே மக்களிடம் பெற்ற நன்கொடை மூலம் ஒரு கவிஞனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது பாரதிக்கு மட்டுமே. அந்த மணிமண்டபத்தில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் சிறிய நூலகம் இருக்கிறது. அங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் உள்ளன. 

கம்பர், வள்ளுவருக்குப் பிறகு பாரதி குறித்து எழுதப்படும் புத்தகங்கள்தான் அதிகம். அப்படி புத்தகம் எழுதும் எழுத்தாளர்கள் அந்த புத்தகங்களின் ஒரு பிரதியை பாரதி மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கும், பாரதியார் எட்டயபுரம் இல்லத்தில் உள்ள நூலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. 

இந்த விழா நடத்த இடம் கொடுத்துள்ள காமராஜர் பெயர் தாங்கிய கல்லூரியின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழா பாரதிக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தனது மண்ணில் தனக்குப் பாராட்டு கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் பாரதி. அவரின் அந்தக் கனவை  நிறைவேற்றும் நோக்கில் பாரதி ஆய்வாளர்களுக்கு இந்த மண்ணில் தினமணி விருது வழங்குவதை பாரதி மகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருப்பார். 

பாரதி விருது பெறும் ஆ.இரா. வேங்கடாசலபதி தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பாரதி குறித்த ஆய்வுகளுக்காகச் செலவிட்டவர் என்றார் 
கி. வைத்தியநாதன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com