பள்ளிகளில் விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமா?

தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவோம் என உறுதியளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி அளவில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, விளையாட்டு கட்டமைப்புகளை
பள்ளிகளில் விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமா?

தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவோம் என உறுதியளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி அளவில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பதவியேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், விளையாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமெனில், பள்ளி அளவில் விளையாட்டுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வியை கட்டாயப் பாடமாகவும், உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

53,000 பள்ளிகளுக்கு 5,100 பணியிடங்கள்: தமிழகத்தில் 34,000 தொடக்கப் பள்ளிகள், 10,000 நடுநிலைப் பள்ளிகள், 4,600 உயர்நிலைப் பள்ளிகள், 5,000 மேல்நிலைப் பள்ளிகள் என 53,500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. தேசிய ஆசிரியர் கல்விக் குழுவானது 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலும் உடற்கல்வி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இது தமிழக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என மாநில அரசும் உறுதி அளித்தது. ஆனால், தொடக்க, நடுநிலை என சுமார் 40,000 பள்ளிகள் உள்ள நிலையில், 4,656 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. அதிலும் 1000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல, 9,600 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக 89 உடற்கல்வி இயக்குநர் (நிலை 2) பணியிடங்கள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகளில் 416 உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) பணியிடங்கள் உள்ளன. இதிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன.

மைதானம், நிதி ஒதுக்கீடு இல்லை: பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லை. இதேபோல, விளையாட்டு உபகரணங்களும் முறையாக வழங்கப்படவில்லை. வட்டம், மாவட்ட அளவிலான போட்டிகளுக்குச் செல்லும்போது, மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் அல்லது இயக்குநர்களுக்கு தலா ரூ. 125 உணவுக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் அந்தந்தப் பள்ளியின் பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

மண்டல, மாநில அளவிலான போட்டிகளுக்குச் செல்ல தலைமையாசிரியர் நிதி, பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி அல்லது நன்கொடை வசூலித்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான தலைமையாசிரியர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்ல பணம் வழங்குவதில்லை என்பதே உடற்கல்வி ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

சாதிக்கும் பள்ளி மாணவர்கள்: பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு நிகராக, மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். விளையாட்டு விடுதிகளுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோல, பள்ளி அளவிலும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், ஆசிரியர் பணியிடங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஆரோக்கியசாமி கூறியதாவது:

மாணவர்களுக்கு உடல் நலமும், மன நலமும் உடற்கல்வி மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும். அந்த வகையில்தான், தமிழகத்தில் கல்விக் கொள்கைகளைப் பரிந்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிபதி முத்துக்குமரன் தலைமையிலான குழுவும் உடற்கல்வியை கட்டாயப் பாடமாக அமல்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும்; பள்ளிகள்தோறும் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் அளித்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை பள்ளிகளில் விளையாட்டு வளர்ச்சிக்கும் தர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 160 மாணவர்கள் இருந்தால், 9 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், 400 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி இயக்குநரை நியமிக்க முடியும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும் என்றார் அவர்.

தரமற்ற விளையாட்டுப் பொருள்கள்
பள்ளிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருள்கள் தரமற்றவையாக இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. தற்போது மாநில திட்ட இயக்ககம் மூலம் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) உடற்கல்வி சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு வழங்கும் பணி நடைபெற உள்ளது. ரூ. 25,000 மதிப்பிலான விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்படுவதாகக் கூறினாலும், அவை தரமற்றவையாக இருப்பதால் 2 மாதங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com