முன்னாள் அமைச்சர் கார் கண்ணாடியை உடைத்து வேட்பாளரைக் கடத்தி சென்ற மர்ம நபர்கள்!

முன்னாள் அமைச்சர் கார் கண்ணாடியை உடைத்து வேட்பாளரை மர்ம நபர்கள் கடத்தி சென்றததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கார் கண்ணாடியை உடைத்து வேட்பாளரைக் கடத்தி சென்ற மர்ம நபர்கள்!

வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்காரின் கண்ணாடியை உடைத்து, கரூர் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.திருவிகா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். 

கரூரில் இன்று மதியம் 2 மணி அளவில் கரூர்  மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி, திமுகவைச் சேர்ந்த சிலர் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்காரின் கண்ணாடியில் ஆசிட் ஊற்றி, கண்ணாடியை உடைத்து கடத்திச் சென்றனர்.

மாவட்ட கவுன்சிலர் எஸ்.திருவிகா, இன்று ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில் திமுகவை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிமுக மாவட்ட கவுன்சிலர் திருவிகா மகன் தமிழ்செல்வன், கட்சி வழக்குரைஞர் மற்றும்  ஆதரவாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆகியோரிடம் கடத்தபபட்ட தனது தந்தையை மீட்டுக் கொடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்றார். 

அப்போது, ஆட்சியர் இந்த தேர்தல் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது. உங்கள் புகார் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறேன் எனக்கூறி விட்டு தேர்தலை நடத்த சென்றுவிட்டார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 2 மணிக்கு வந்தார். 

அப்போது ஆட்சியர் அலுவலகம் முன் காவல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் திமுகவினரையும், அவரது ஆதரவாளர்களையும் உள்ளே விடாமல் தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து கலைத்தனர். அப்போது ஒருவரையொருவர் மீது செருப்புகளை வீசிக்கொண்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

இதனிடையே மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான த.பிரபுசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் திமுக கவுன்சிலர் 6 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் பங்கேற்றனர். இந்த பரபரப்பான சூழலில் திங்கள்கிழமை மாவட்ட கவுன்சிலர் தேர்தல் 6வது முறையாக நடந்து கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com