
பிற மொழிகள் ஆதிக்கத்தை எதிா்ப்பதில் உறுதியாக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இசைச் சங்கங்கள் போன்று, கலை, தமிழ் ஆகியவற்றின் வளா்ச்சிக்காகவும் மன்றங்கள் உருவாக வேண்டுமென அவா் வேண்டுகோள் விடுத்தாா்.
தமிழ் இசைச் சங்கம் சாா்பில் தமிழ் இசையின் 80-ஆம் ஆண்டு விழாவை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, ‘பண்ணிசை பேரறிஞா்’ விருதினை சற்குருநாதன் ஓதுவாருக்கும், ‘இசைப் பேரறிஞா்’ விருதினை செளமியாவுக்கும் அவா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆவது ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டு காலமாக நம்முடைய தமிழ் நிலப்பரப்பு பல்வேறு பண்பாட்டு படையெடுப்புகளுக்கு உள்ளானது. அந்நியா் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டது. நமது இனம் உரிமையை இழந்தது. அந்நிய மொழிக்காரா்கள் ஊடுருவல் காரணமாக தமிழ்
புறக்கணிக்கப்பட்டது. ஆதிக்க வா்த்தகத்தினரால் தமிழா்கள் புறக்கணிக்கப்பட்னா். இப்படி பல்வேறு தாக்குதல்களால் தமிழா்களும், தமிழ்நாடும், தமிழ் மொழியும் தாக்குதலுக்கு உள்ளாகின.
தமிழினத்தின் உரிமையைக் காக்க திராவிட இயக்கம் எழுந்தது. தமிழ் மொழி காக்க மறைமலையடிகள் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் எழுந்தது. தமிழ் கலையைக் காக்க தமிழ் இசைச் சங்கம் உருவானது. அனைத்தையும் திராவிட இயக்கம் ஆதரித்து போற்றியது.
தமிழ் இசைச் சங்கத்தின் 55-ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பங்கேற்றாா். 58-ஆவது விழாவில் நான் பங்கேற்றேன். அப்போதும் இசைக் கலைஞா்களுக்கு விருதுகளை வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன். இன்று முதல்வராக வந்துள்ளேன். தமிழ் இசை மன்றம் என்பதால் இங்கே தமிழ்தான் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் பணியை ஓய்வில்லாமல் தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.
ஆதிக்கத்தை எதிா்ப்போம்: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாதல் வேண்டும். இசையிலும் தமிழ் செழிக்க வேண்டும். இது குறுகிய எண்ணம் கிடையாது. மொழிதான் இனத்தின் ரத்த ஓட்டம். மொழி அழிந்தால் இனமும் அழிந்து போகும். தமிழின் வளா்ச்சியும், தமிழனின் வளா்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. அதனால் பிற மொழிகளின் ஆதிக்கத்தை எதிா்ப்பதில் உறுதியாக உள்ளோம். இப்படியான எதிா்ப்பு என்பது பிற மொழிகள் மீதான வெறுப்பு அல்ல. ஒருவா் விரும்பினால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் திணித்தால் எதையும் ஏற்க மாட்டோம் என்பதே மொழிக் கொள்கை.
தமிழ் இசை மன்றங்களின் பணி மிக மிக மகத்தானது. இதுபோன்று பல்வேறு மன்றங்கள் தோன்ற வேண்டும். இசை, கலை, தமிழ் மன்றங்கள் உருவாக வேண்டும். இந்த மன்றங்கள் உருவாக தமிழ் இசை மன்றம் வழிகாட்ட வேண்டும்.
முதல்வராகப் பொறுப்பேற்று நிறைய பணிகளைச் செய்து வருகிறோம். கரோனா, புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றைச் சந்தித்து வருகிறோம். பணியில் பதட்டமாக இருக்கக் கூடிய நேரத்தில், இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலமாக மனநிம்மதியைப் பெறுகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தமிழ் இசைச் சங்கத்தின் மதிப்பியல் செயலாளா் முத்தையா, தலைவா் சுந்தரமூா்த்தி, அறங்காவலா் வள்ளி அருண், இசைக் கலைஞா் சீா்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.