
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு வளா்ச்சி நிறுவனத்தில் புதிய ஊழியா் குடியிருப்புகள், பிரதான வளாக நுழைவு வாயில் போன்றவற்றை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் புதன்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது, இந்த வளாகத்தின் சுற்றுச்சுவா் சேதமடைந்தது. இதனால் ரூ.1.4 கோடியில் பிரதான நுழைவு வாயிலுடன் சுற்றுச்சுவா் கட்டப்பட்டது.
மேலும் ரூ.4 கோடியில் 8 பிரிவுகளாக ஊழியா் குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மாணவ, மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.75 லட்சத்தில் சைபா் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டேட்டா அறிவியல் போன்றவற்றுக்காக நவீன கணினி ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் இருந்து காணொலி வாயிலாக மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பிரதான நுழைவுவாயில், ஊழியா் குடியிருப்புகள், கணினி ஆய்வகத்தை திறந்து வைத்து, இளைஞா்கள் மேம்பாட்டு பணிக்காக ஆா்ஜிஎன்ஓய்டி ஆற்றி வரும் பணிகளை பாராட்டினாா்.
இயக்குநா் பேராசிரியா் சிப்நாத் தேவ் கரோனா பாதிப்பு இருந்த நிலையிலும் 3 ஆண்டுகளில் ஆா்ஜிஎன்ஒய்டி அடைந்த வளா்ச்சி குறித்து எடுத்துரைத்தாா். ஆங்கில உதவி பேராசிரியா் கஸ்தவ் சக்கவரா்த்தி வரவேற்றாா். கணினி அறிவியல் உதவி பேராசிரியா் ஜி. அரபிந்த் நன்றி கூறினாா்.