நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ஆட்சியர் அலுவலகம் ஜப்தி!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 13 பொருள்களை வியாழக்கிழமை ஜப்தி செய்ய நடவட
ஆட்சியர் அலுவலகம் ஜப்தி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குரைஞர் உள்ளிட்டோர்.
ஆட்சியர் அலுவலகம் ஜப்தி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குரைஞர் உள்ளிட்டோர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 13 பொருள்களை வியாழக்கிழமை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த 1985 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு சுமார் 55 நபர்களிடமிருந்து 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி, உரிமையாளர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நடைபெற்றது. அந்த வழக்குகளில் நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வீதம், 1985 முதல் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுவரை  இழப்பீட்டுத் தொகை வழங்காததை அடுத்து, நிலம் வழங்கியவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் 3 கார்கள் மற்றும் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குரைஞர் ஆகியோர் ஜப்தி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனர்.

நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இம்மாத இறுதிக்குள் நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்திவிடுவதாக உறுதி அளித்தனர். 

அதனைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக நிலம் வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் வழக்குரைஞர் குமரவடிவேல் கூறியதாவது:

நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையுடன், 1985 முதல் கணக்கீடு செய்து அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தொடுத்த வழக்கிலும், உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் வட்டித் தொகையை வழங்காமல், அசலில் குறிப்பிட்டத் தொகையை கழிப்பதற்கான முயற்சியில் ஈடுட்டது. முதலில் வட்டித் தொகையை கழித்துவிட்டு அதன் பின்னரே அசல் தொகையை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜப்தி நடவடிக்கைக்கு வந்தபோதும், மாவட்ட வருவாய் அலுவலர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனாலும் இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் ஆட்சியரின் 3 கார்கள், மேஜை, நாற்காலி, கணினி, குளிரூட்டம் சாதனங்கள் உள்ளிட்ட 13 பொருள்களை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரு வார காலத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிடுவதாக மீண்டும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com