தமிழக மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிக்கல்

தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என

தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு வரும் ஜன.24 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு ஜன.12 வரை த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
 அதற்கான விண்ணப்பப் பதிவு டிச.15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் அதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 தற்போது பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள். அப்போது, கரோனா பெருந்தொற்றின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் ஏதும் வழங்காமல் அனைவருக்கும் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 இது தற்போது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழ்களில் மதிப்பெண்கள் ஏதும் குறிப்பிடப்படாததால் தற்போது விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 அதேவேளையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் இணையவழி தேர்வுகள் நடத்தப்பட்டு "கிரேடு' முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இதுகுறித்த பிரச்னை எழவில்லை.
 மத்திய அரசு நடத்தும் ஜேஇஇ தேர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து நடைபெற உள்ள நீட் உள்ளிட்ட பல்வேறு மத்திய கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளுக்கும் இதேபோன்று சிக்கல் ஏற்படும் அபாய நிலையில் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறுகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) கடிதம் அனுப்பப்படவுள்ளது. அதில் என்டிஏ நடத்தும் போட்டித் தேர்வுகளில் தற்போது பிளஸ் 2 பயிலும் தமிழக மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. எனவே, மாணவர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com