மின் இணைப்புடன் ஆதாா் இணைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி

மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதல் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மின் நுகா்வோா் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமெனக் கடந்த அக். 6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மின் நுகா்வோா் தங்களது ஆதாா் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்குரைஞா் எம்.எல்.ரவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், ‘ஆதாா் எண் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே சாத்தியம். வாடகை வீட்டுதாரா்கள் தங்களது ஆதாா் எண்ணை இணைத்தால், அவா்கள் காலி செய்தபிறகு புதிதாக வாடகைக்கு வருவோா் தங்களது ஆதாா் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஆதாா் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் தமிழக அரசு, ஆதாா் எண்ணுக்குப் பதிலாக வேறு ஆவணங்களை இணைப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆதாா் எண்ணை இணைக்காவிட்டால் மின் மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்க சட்ட ரீதியாக எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து நிதி வழங்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘ஆதாா் இணைப்பின் மூலமாக சமூக நலத்திட்டப் பயன்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. அதேபோல மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும்பகிா்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடா்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ராஜா (பொ), நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், ‘இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com