ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் பதிவு செய்வதில் விலக்கு: தேசிய தேர்வு முகமைக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம்

தமிழ்நாடு மாநிலபாடத்திட்டத்தின் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் பதிவு செய்வதில் விலக்கு: தேசிய தேர்வு முகமைக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம்


சென்னை: தமிழ்நாடு மாநிலபாடத்திட்டத்தின் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை வைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது:

2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடக்கவில்லை. தமிழ்நாட்டிலும் அவ்வாறான சூழலே நிலவியது.

ஆகவே பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் தேர்வானதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அப்போது அறிவித்தது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என்று சான்றும் வழங்கப்பட்டது.

இப்போது, 2021 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை 2023 இல் எழுத உள்ளனர். அவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அல்லது தரநிலையை தேசிய தேர்வு முகமை கேட்கிறது. ஆனால், நம் மாணவர்கள் தரநிலையை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர்.

அதனால், பெருந்தொற்று கால அவசர நிலையை மனதில் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என்று தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளது . தேசிய தேர்வு முகமையும் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளது.

எனவே, ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்ற மடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம். இந்த கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம் என அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com