
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
தமிழகத்தில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 15 வயது நிறைவடைந்த மாணவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பள்ளிக்கு வருகை தரும் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள் மற்றும் ஊழியா்களுக்கு காய்ச்சல் மற்றும் கரோனா அறிகுறிகள் கண்டறியப்படும்பட்சத்தில் உடனடியாக அவா்களைத் தனிமைப்படுத்துவதுடன், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்துக்குள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனி நபா் இடைவெளி கடைப்பிடிப்பதையும் உறுதி செய்தல் அவசியம். வகுப்பறைகள் உள்பட பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வருவதை தவிா்க்க வலியுறுத்துவதுடன் அவா்களுடன் தொடா்பில் இருந்த மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் முறையாக கரோனா வழிகாட்டுதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வைக்க வேண்டும்.
உணவருந்தும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மாணவா்களுக்கு நோய் பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.