வில்லிவாக்கம் ஏரிக்குள் கட்டுமானங்கள் கூடவே கூடாது: பசுமைத் தீர்ப்பாயம்

வில்லிவாக்கம் ஏரியில் பொழுதுபோக்கு பூங்கா கட்டுமானத்துக்குத் தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கம் ஏரி
வில்லிவாக்கம் ஏரி

சென்னை: வில்லிவாக்கம் ஏரியில் பொழுதுபோக்கு பூங்கா கட்டுமானத்துக்குத் தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், 11.5 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையும், மீதமுள்ள 27.05 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்குப் பூங்காவையும் கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. 

ஏரிகளை சீரமைக்கும் போது, கட்டுமானங்களை ஏற்படுத்தி, அதன் நீர்ப்பரப்புகளைக் குறைந்துவிட வேண்டாம், அதன் முழு நீர்ப்பரப்பும் மீட்கப்படுவதை உறுதி செய்யுங்கள் என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

வில்லிவாக்கம் ஏரியின் மீது உணவகம், பொழுதுபோக்குப் பூங்கா உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தும் 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து, வில்லிவாக்கம் ஏரியின் சுருங்கிப்போன பரப்பான 39 ஏக்கரில், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 27.5 ஏக்கா் நிலத்தின் ஒரு பகுதியில், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை கட்ட திட்டமிட்டு இறுதிக்கட்ட பணிகளும் நடந்து வந்தன. 

இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக 39  ஏக்கர் பரப்பளவு கொண்ட வில்லிவாக்கம் ஏரி முழுவதுமாக சீரமைக்க வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயத்தில் அறப்போா் இயக்கத்தின் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணா் குழு உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பொழுதுபோக்குப் பூங்கா ஆகியவற்றை, ஏரியின் பரப்புக்குள் அல்லாமல், ஏரியின் நீர் பரப்புக்கு வெளியே மாற்றிக்கொள்ள மெட்ரோ குடிநீர் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், ஏரியை சீரமைப்பதற்கான பலனை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையோ, பொழுதுபோக்குப் பூங்காவோ பூர்த்தி செய்யப்போவதில்லை. ஒரு வேளை, இந்த கட்டுமானங்களுக்கு அனுமதியளிக்கும்பட்சத்தில், ஏரியை சீரமைக்கும் திட்டமே தோல்வியடைந்ததாகிவிடும். ஏரியின் நீர் பரப்புக்கு வெளியே மட்டுமே, பொழுதுபோக்குப் பூங்கா உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு அனுமதி வழங்க முடியுமே தவிர, நீர்ப்பரப்பிலேயே கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது.

அது மட்டுமல்லாமல், ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை எங்கு அமைக்கப்பட்டிருக்கிறதோ, அங்கேயே இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையையும் மாற்றுவது குறித்து மெட்ரோ குடிநீர் வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு போன்றவை ஏரிக்கு வெளியில் இருக்க வேண்டும். அவை ஏரிக்குள்ளேயே இருக்கக்கூடாது. மீறி கட்டினால் அவை இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். தேவை இல்லாமல் மாநகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு இழப்பு ஏற்படலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர்நிலைகளைப் பாதுகாக்க ஒதுக்கப்படும் நிதியை, அதனை சீரமைக்கவும், சட்டத்துக்கு உள்பட்டு நீர்நிலைகளைப் பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்துங்கள், மாறாக, ஏரியின் நிலப்பரப்பையே குறைக்கும் பணிகளுக்காக அல்ல என்றும் கூறியுள்ளது. மேலும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர், இது குறித்து தனித்தனியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், வில்லிவாக்கம் ஏரியானது, முன்பு 214 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது அது பல்வேறு கட்டுமானங்கள் மற்றும் விதிகளை மீறி குடியிருப்புகள் கட்டப்பட்டதால் தற்போது 39 ஏக்கராகச் சுருங்கியுள்ளது. எனவே, இந்த 39 ஏக்கர் ஏரிப் பரப்பையாவது, முழுமையாக தண்ணீர் தேங்குவதற்கான பரப்பாகவே விட்டுவைக்க வேண்டும். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது தோண்டப்பட்ட கழிவுகள் அனைத்தும் இந்த ஏரியில் கொட்டப்பட்டதால், ஏரியின் நீர்வரும் வாயில்கள் அடைத்துக் கொண்டன. அதனால்தான், 2015ஆம் ஆண்டு பெரும் மழை வெள்ளத்தால், இப்பகுதிக்கு அருகே குடியிருப்போர் கடுமையாக பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com