இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம்: முதல்வர் 

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம்: முதல்வர் 

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று, கட்சித் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார்.

அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் அணிகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அதன் செயலாளர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அணியை உருவாக்கி இதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். நிதி அமைச்சராக ஆன பிறகு இரண்டையும் சேர்த்து கவனிக்க இயலாத அளவுக்குப் பணிச்சுமையில் தள்ளப்பட்டார். 'இந்தப் பொறுப்பில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்று அவர் என்னிடம் சொன்னார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகச் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரும் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலத் திட்டக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அத்துடன் தகவல் தொழில்நுட்பப் பிரிவையும் சேர்த்து கவனிக்க முன்வந்துள்ளார்.

கட்சியின் அடிப்படைக் கொள்கை மீது அழுத்தமான நம்பிக்கையும் - செயல் திறனும் - மக்கள் பணியும் - அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவும் கொண்ட ராஜாவைப் போன்றவர்கள் இப்பொறுப்பினை முன்வந்து ஏற்றுக்கொண்டு இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. துடிப்பானவர்கள் கையில் இந்த அணி இருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல் யுகமான இந்தக் காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். செய்திகளுக்காக அடுத்த நாள் காலை வரை மக்கள் காத்திருந்த காலக்கட்டத்தில் இருந்து, இணையவசதியால் நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் யுகத்துக்கு வந்துவிட்டோம். எல்லா நிகழ்ச்சிகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே மக்கள் நேரலையில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப அணியினரான நீங்கள், எல்லோரையும் விட கூடுதல் வேகத்தோடு பணியாற்ற வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக அரசின் சாதனைகளை இளைஞர்களிடையே – சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் உள்ளது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் எப்படிப் பணியாற்றி வருகிறேன் என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கிறேன்.

கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடுபவனாக மட்டுமின்றி – மக்களுக்கு அந்த உத்தரவுகளின் பயன் முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதைக் கவனிக்கும் பணியையும் செய்துகொண்டு இருக்கிறேன். இதற்குச் சாட்சியாகப் பல புகைப்படங்களும் காணொளிகளும் செய்திகளும் உள்ளன.

சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய அளவிலான ஊடகங்கள் நம்மைப் பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com