நீட் தேர்வை அரசியலுக்காக எதிர்க்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வை அரசியலுக்காக எதிர்க்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை அரசியலுக்காக எதிர்க்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வை அரசியலுக்காக எதிர்க்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அதில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளரவேண்டும் - அனைத்துத் துறைகளும் வளரவேண்டும் என்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆட்சி நமது ஆட்சி.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மத்திய அரசிடமும் நம்முடைய தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் போராடியும் வாதாடியும் பெறுகிற இயக்கமாக - ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டின் ஏழை - எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக நீட் தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை நாம் இழந்தோம். நீட் தேர்வு என்பது பல லட்சம் கொடுத்துப் பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மாணவர்களுக்குத்தான் வசதியானது. முதல் ஆண்டு இடம் கிடைக்கவில்லையா? அடுத்த ஆண்டும் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் பயிற்சி பெறுகிறார்கள். இது எல்லா மாணவ, மாணவியராலும் முடியுமா? ஏழைகளால் முடியுமா? முடியாது.

அரசுப் பள்ளியில் படிப்பவர்களால் முடியுமா? முடியாது!

நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும் - மறுநாளே – அதாவது, நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக, வரும் 8-ஆம் நாள் - அதாவது நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம்.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு மதிக்கவே இல்லை; பல மாதம் கிடப்பில் போட்டது. காரணம் எதுவுமே சொல்லாமல் - குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இந்தத் தகவல் தமிழ்நாடு அரசுக்குச் சொல்லப்பட்டும், சட்ட அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம் அதனை மூடி மறைத்துவிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான்தான் கேள்வி எழுப்பினேன்.

நீட் தேர்வை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அதன் முகமூடியைக் கழட்டிப் பார்க்க வேண்டும். வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை. மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே நீட் தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

நீட் தேர்வு என்பதே 2016-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசாங்கத்தால் திணிக்கப்பட்டதுதான்.  அந்தத் தேர்வுக்கு 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் 2016-17-ஆம் ஆண்டுக்கான தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தது; நான் மறுக்கவில்லை. இதே எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி இருந்தால் தேர்வை நடத்தாமல் விட்டிருப்பார்கள். ஆனால், அ.தி.மு.க. அரசாங்கம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டதுதான் இவ்வளவு பிரசனைக்கும் காரணம்.

இதோ இப்போது நாம் துணிச்சலோடு, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்புல பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கிற திமுக அரசாங்கம் மாநில ஆட்சியை நடத்தி வரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் - கோட்டையில் இருந்து உருவாக்கும் அனைத்துத் திட்டங்களும் - அனைத்து கிராமங்களுக்கும் - நகரங்களுக்கும் செல்லும். அனைத்து வீதிகளுக்கும் வீடுகளுக்கும் போய்ச் சேரும்.

விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com