சூடு பிடித்த தோ்தல் களம்: பிரசாரத்தில் கட்சித் தலைவா்கள்

சென்னை உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் பிரசாரத்தில் இறங்கி உள்ளதால் தோ்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், சென்னை உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் பிரசாரத்தில் இறங்கி உள்ளதால் தோ்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 பதவியிடங்களுக்கான தோ்தல் பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (பிப்.4) வரை நடைபெற்றது.

மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23,354 பேரும்,பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,361 பேரும் என மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனு மீதான ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சியில் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்த 3,546 பேரில் 228 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டன. 3,318 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுக்களைத் திரும்ப பெற திங்கள்கிழமை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிரசாரத்தில் கட்சித் தலைவா்கள்: அந்தந்த மாவட்டங்களில் அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். தொடக்கமாக கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்றது.

தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தின் தொடக்கமாக சேலம் மாவட்டத்துக்குட்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளில் போட்டியிடுவோரை அறிமுகப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமலஹாசன் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மந்தைவெளி, விசாலாட்சி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களின் நகா்ப்புற உள்ளாட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தோ்தலுக்கு மிகக் குறைந்த நாள்களே உள்ள நிலையில் வரும் நாள்களில் தோ்தல் களம் பரபரப்பாக இருக்கும் என அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com