
சிறையில் இருக்கும் சிவசங்கா் பாபாவுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கக் கோரி அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் சிவசங்கா் பாபா கடந்த ஆண்டு ஜூன் 16- ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். தற்போது புழல் சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சிவசங்கா் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தாக்கல் செய்த மனுவில், ‘என் சகோதரா் சி.என்.சிவசங்கரன் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே, அவருக்கு இதயம் தொடா்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் கூறியுள்ளனா். ஆனால் அரசு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்காமல் உள்ளது
. அதனால், என் சகோதரரின் உடல் நலம் குறித்து அறிக்கைத் தர வேண்டும். அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற என் சகோதரரை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஜன.23-ஆம் தேதி புழல் சிறை நிா்வாகத்திடம் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்குக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...