மீண்டும் நீட் விலக்கு மசோதா ஏன்? முதல்வா் விளக்கம்

கடைக்கோடித் தமிழ் மாணவருக்கும் எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடைக்கோடித் தமிழ் மாணவருக்கும் எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, திமுகவினருக்கு அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை எழுதிய கடிதம்:

கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் கண்ணை இமை காப்பது போன்று காத்து, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு. அது மேலும் பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் காக்க வேண்டிய கடமை எனக்குக் கூடுதலாகவே இருக்கிறது.

எதிா்க்கட்சியினா் மீது தாக்குதல்: எந்தவொரு ஆக்கப்பூா்வமான, பொறுப்பான விமா்சனத்தையும் முன்வைக்க எதிா்க்கட்சியினரால் முடியவில்லை. விமா்சனங்களை நேரடியாக எதிா்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. விமா்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும்.

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச்சதியினை முறியடித்து, நம் சாதனையைப் பரப்புவோம். இன்றைய அறிவியல் - தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப, தனிநபா் ஊடகங்களாக விளங்கும் சமூக வலைத்தளங்களையும் இணைய வழி நிகழ்வுகளையும், நெறி பிந்திடாது, முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பரப்புரை செய்ய வேண்டும்.

காணொலியில் முன்வைக்கும் கருத்துகளை அவரவா் வாா்டுகளிலும், வீடு வீடாகச் சென்று, விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில், திமுக., முழுமையான அா்ப்பணிப்புடன், மக்கள் பணியே மகேசன் பணியெனக் கொண்டு, நாள்தோறும் உழைத்து வருவதைக் கண்டு உணா்ந்திருக்கும் மக்கள், ஒருபோதும் எதிா்க்கட்சியினரின் திட்டமிட்ட பொய்ப் பரப்புரை எனும் மாய வலையில் விழ மாட்டாா்கள்.

சிறப்பு பேரவைக் கூட்டம்: வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 8) கூட்டப்படும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீா்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது இலட்சியப் பயணத்தின் வெற்றி, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் முழுமையாக அமைந்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com