காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை: சாலை மறியல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வே.ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வே.ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அக்கட்சியினர் திடீரென வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வரும் வே.ஜானகிராமன்(34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் காஞ்சிபுரத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 36வது வார்டில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தனது தம்பியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் அவரது தம்பி எழுந்து பார்த்தபோது வே.ஜானகிராமன் கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் இருந்தார். உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அரசு மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி.காஞ்சி.பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.வாலாஜாபாத்.பா.கணேசன் ஆகியோர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சமாதானமாக பேசியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம் கூறுகையில், 

இவர் போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் தொடர்ந்து இவரை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மிரட்டிக் கொண்டே இருந்தனர். அவரும் இதை எங்களிடம் முறையிட்டார். வியாழக்கிழமை எஸ்.பி.யை சந்தித்து புகார் செய்வோம் என்று கூறியிருந்த நிலையில் அவரது மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது கைபேசியில் இருக்கும் ஆதாரங்களை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய டி.எஸ்.பி.ஜூலியஸ் சீசர், ஆய்வாளர் சுந்தரராஜ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

இது குறித்து டி.எஸ்.பி.ஜூலியஸ் சீசர் கூறுகையில், 

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார். சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூறுகையில் வேட்பாளர் ஜானகிராமனின் உயிரிழப்புக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

36வது வார்டு தேர்தல் நிறுத்தி வைப்பு

அதிமுக வேட்பாளர் வே.ஜானகிராமன் உயிரிழந்துவிட்டதால் 36வது வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாநகர தேர்தல் அலுவலரும், ஆணையருமான பா.நாராயணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com