‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் ஸ்டாலின்’: எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

வாழப்பாடி: தமிழக முதல்வர் ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கின்ற ஸ்டாலின், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை. நிறமாறும் கட்சி திமுக. அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார் முதல்வர். நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது திமுக.

2010 டிசம்பர் 27-ம் தேதி நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது திமுக காங்கிரசோடு கூட்டணியில் இருந்தது. அப்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற இவர், நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.  இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மருத்துவராகும் வாய்ப்பு குறைந்து காணப்பட்டதால், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று கொடுத்தது அதிமுக அரசு. நானும் கிராமத்தில் பிறந்து அரசுப்பள்ளியில் படித்தவர் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களை நிலையறிந்து, இந்த ஒதுக்கீடு கொண்டு வந்தேன்.

மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு. ஆனால் திமுக எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கிறார். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒருங்கிணைந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர். இளங்கோவன், ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, வாழப்பாடி ஒன்றிய செயலாளர் எஸ்.சதீஷ்குமார், வாழப்பாடி நகர செயலாளர் என்.சிவக்குமார், பேளூர் நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com