புதிய அவதாரம் எடுத்திருக்கும் வாட்ஸ்ஆப்; பிரசார பீரங்கியான கதை

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் வாட்ஸ்ஆப், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், புதிய அவதாரம் எடுத்துள்ளது.
புதிய அவதாரம் எடுத்திருக்கும் வாட்ஸ்ஆப்
புதிய அவதாரம் எடுத்திருக்கும் வாட்ஸ்ஆப்


எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் வாட்ஸ்ஆப், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், புதிய அவதாரம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும், மிக எளிதாக வாக்காளர்களை அடையும் வழியாக இந்த வாட்ஸ்ஆப் மாறியுள்ளது. தற்போது, அனைத்து அரசியல் கட்சிகளும், வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி, அதில் தங்களத கொள்கை, தேர்தல் வாக்குறுதிகள், தங்கள் தலைவர்களின் உற்சாக உரை, நிறைவேற்றிய நலத்திட்டங்கள் போன்றவற்றை வாரி வாரி வழங்கி வருகிறார்கள் வாக்காளர்களுக்கு நேரடியாகவே.

முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் வாட்ஸ்ஆப் செயலியை, படித்த, படிக்காத பாமரர்கள் கூடப் பயன்படுத்துவதே, இப்படி வாட்ஸ்ஆப் செயலியை தங்களது பிரசார பீரங்கியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்த முக்கியக் காரணம்.

கடந்த திங்கள்கிழமை, கட்சியினரிடையே பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி, திமுக அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவும் வலியுறுத்தியிருந்தார்.

இதுபோலவே, பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலையும், கோவையில் திங்களன்று நடைபெற்ற பாஜக தொண்டர்களின் கூட்டத்தில், நகரப் பகுதிகளில் 90 சதவீதம் பேர் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துவதகாவும், எனவே, அதன் மூலம் பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்தியிருந்தார்.

பிரசாரத்துக்கு எத்தனையோ வழிகள் இருக்க, இந்த வாட்ஸ்ஆப் செயலியை அரசியல் கட்சிகள் தேர்வு செய்யக் காரணம் என்ன?

காரணம் இல்லாமலில்லை.. வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்குவது எளிது, இதற்காக எந்த ஒரு நிதியும் தேவைப்படாது. குழுவை உருவாக்குபவரே, கட்சியின் விளம்பரத்துக்கான வாசகங்களை உருவாக்கியோ, எங்கிருந்தாவது எடுத்தோ குழுவில் பகிரலாம். அந்த குழுவில் இருப்பவர்கள், அந்தச் செய்திய பகிருமாறும் வலியுறுத்தலாம். கட்சித் தலைவரின் பேச்சு, நலத்திட்ட உதவிகள் தொடர்பான ஆவணங்கள் என எதை வேண்டுமானாலும் அதில் பகிர்ந்து கொள்ளலாம்.

இதுபோன்ற குழுக்களை வைத்திருக்கும் கட்சியினருக்கு, அந்தக் கட்சியின் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள் பெரிய அளவில் பின்னணியிலிருந்து உதவவும் முடிகிறது.

இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு வார்டிலும் 5 முதல் 10 தெருக்கள் இருந்தால், அவற்றில் இருப்பவர்களுக்கு ஒரு குழுவை உருவாக்கி, அந்தப் பகுதியில் என்ன பிரச்னை இருக்கிறது, என்னத் தேவை என்பதை அந்தக் குழுவில் பகிரும்போது, அரசியல் கட்சிகளின் வேலை எளிதாக முடிகிறது.

வாக்காளர் பட்டியல் மூலமாக, பல அரசியல் கட்சிகள், வாக்காளர்களை எளிதாக அடையாளம் கண்டு, அவர்களின் எண்களைக் கொண்டு வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி, நேரடியாகவே வாக்காளர்களை சிரமமின்றி தொடர்பு கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.

இதில், கத்தியில்லை, ரத்தமில்லை என்பதுபோல, யாருக்கும் எந்த தொல்லையும் தராமல், சத்தமே இல்லாமல் கனக்கச்சிதமாக பிரசார வேலை நடந்தேறி விடுகிறது.

வெறும் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சுயேச்சை வேட்பாளர்கள் கூட, இதுபோன்ற வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி, தங்களது தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள். இதுபோல, ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி பராமரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, குடும்பத்தினரின் வாட்ஸ்ஆப் குழு, அலுவலகக் குழு, பயணக் குழு, நண்பர்கள் குழு, பள்ளிக் குழு, கல்லூரி குழு என இருந்த நிலையில், தற்போது புதிதாக அரசியல் கட்சிகளின் பெயர்களிலும் குழுக்கள் உருவாகி, அதில் பிரசாரமும் நடந்து வருவது, கால மாற்றத்துக்கு ஏற்ப, புதிய மாற்றங்களை அரசியல் கட்சிகள் பின்பற்றுவதையே காட்டுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com