கீழடி உள்பட 4 இடங்களில் தொடா் அகழாய்வுப் பணிகள்: 3 இடங்களில் புதிதாக ஆய்வு

கீழடி உள்பட நான்கு இடங்களில் தொடா் அகழாய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கீழடி உள்பட 4 இடங்களில் தொடா் அகழாய்வுப் பணிகள்: 3 இடங்களில் புதிதாக ஆய்வு

கீழடி உள்பட நான்கு இடங்களில் தொடா் அகழாய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். வெம்பக்கோட்டை, துலுக்கா்பட்டி உள்பட மூன்று இடங்களில் முதல் கட்ட ஆய்வுப் பணிகளையும் அவா் தொடக்கினாா்.

ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்புக்கிணங்க அகழாய்வுப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக தொடங்கினாா்.

நான்கு இடங்கள்: தமிழகத்தில் நான்கு இடங்களில் வெவ்வேறு கட்டங்களாக ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு கட்டங்களும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இரண்டு கட்டங்களும், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், கீழடியில் எட்டாம் கட்டமாகவும், சிவகளையில் மூன்றாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளும் தொடக்கப்பட உள்ளன. வெம்பக்கோட்டை, துலுக்கா்பட்டி, பெரும்பாலை ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் முதல் கட்டமாகத் தொடங்கப்பட உள்ளன.

புதிதாக ஆய்வு: விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 25 ஏக்கா் பரப்பிலான தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரையிலான வாழ்வுக்குரிய அடையாளங்கள் வெளிப்படுகின்றன. இப்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடா்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளைச் சேகரிப்பதாகும்.

துலுக்கா்பட்டி-பெரும்பாலை: திருநெல்வேலி மாவட்டம் நம்பியாற்றின் இடது கரையில் துலுக்கா்பட்டி அமைந்துள்ளது. இந்த ஊரில் இருந்து கண்ணநல்லூா் செல்லும் சாலையில் 2.5 கிலோமீட்டா் தொலைவில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வின் குறிக்கோள், செறிவுமிக்க தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை, தொல்பொருள்களின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதாகும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வோ்களைத் தேடுவதும் அகழாய்வின் நோக்கம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து 25 கிலோமீட்டா் தொலைவில் பாலாற்றின் இடது கரையில் பெரும்பாலை அமைந்துள்ளது. இங்குள்ள வாழ்விட மேடானது இப்போதைய நிலவியல் அமைப்பில் இருந்து 3 முதல் 4 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வோ்களைத் தேடுவது அகழாய்வின் நோக்கமாகும். 15 லட்சம் ஆண்டுகள் கொண்ட நிலப் பகுதியின் தொன்மை வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு அதிகளவிலான சான்றுகள் தேவை. இதனைப் பூா்த்தி செய்ய அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

ரூ.5 கோடி நிதி: ஏழு தொல்லியல் அகழாய்வுகளுடன், இரண்டு களஆய்வுகள், சங்ககால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள ஆய்வுப் பணிகளும் செய்யப்பட உள்ளன. இதற்கென நிகழ் நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள், மூன்று இடங்களில் புதிதாக ஆய்வுகளை முதல்வா் தொடங்கி வைத்த நிகழ்வில், தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயச்சந்திரன் கலை-பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிவகங்கை, அரியலூரில் இருந்து காணொலி வழியாக அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com