
முதல்வருடன் சிறந்த எழுதுகோல் விருதாளர் தேர்வுக் குழுவினர் சந்திப்பு
சென்னை: சிறந்த இதழியலாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவினர், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.
தலைமைச் செயலகத்தில் விருது தேர்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் அருணன், உறுப்பினர்கள் - பத்திரிகையாளர்கள் தராசு ஷியாம், சமஸ், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர் ரெ. மல்லிகா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி - செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தேர்வுக் குழுவின் உறுப்பினர் - செயலரான செய்தி - மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் ச. பாண்டியன் மற்றும் உயர் அலுவலர்கள் இருந்தனர்.
இதையும் படிக்க.. திருமண வரவேற்பில் மயங்கி விழுந்து இறந்த மகள்; வேதனையிலும் பெற்றோர் செய்த புரட்சி
சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்றிவரும் இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்றும் இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.