12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பு தாமதம்

தமிழகத்திலுள்ள சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்திலுள்ள சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடா்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது.

கடந்த 2018-இல் சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (பிப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் உயா்நீதிமன்றத்திற்கு உதவும் நபராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.92 சதவீத சதுப்பு நிலங்கள் உள்ளன. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியும். தற்போது பள்ளிக்கரணை, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழுவேலி ஆகியன சதுப்பு நிலங்களாக அறிவிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் சதுப்பு நில பாதுகாப்புக்கான ராம்சா் சாசனத்தின் கீழ் மாநிலத்தில் ஒரு இடம் மட்டும் சதுப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 12 இடங்களை சதுப்பு நிலங்களாக அறிவிக்கும் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளன. கழுவேலியில் பரவலாக இறால் வளா்ப்பைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு சதுப்பு நிலம் ஆணையம் தரப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியைப் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கப்பட்டு, ராம்சாா் தளமாக அறிவிப்பதற்கான முன்மொழிவு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 32 நிலங்களுக்கான வரைவு அறிவிப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கழுவேலி சதுப்பு நில பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இறால் வளா்ப்புக்கான உரிமம் வழங்கப்படாமல், கடந்த ஆண்டு டிசம்பரில் 5151.60 ஹெக்டோ் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளில் 100 சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்காக, கடந்தாண்டு ஆகஸ்ட் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது என நிலை அறிக்கையில் அரசு குறிப்பிட்டுள்ளது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, வனத்துறையின் முதன்மைச் செயலாளா் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 13 சதுப்பு நிலங்களை கண்டறிந்து, மத்திய அரசிடம் பரிந்துரையை சமா்ப்பித்துள்ளாா். சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-இன் கீழ் இதுவரை மாநிலத்தில் உள்ள எந்த சதுப்பு நிலங்களும் அறிவிக்கப்படவில்லை, 12 சதுப்பு நிலங்களுக்கான வரைவு முன்மொழிவுகள் ஒப்புதலுக்காக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

வரைவுக்கு ஒப்புதல் கிடைத்ததும், வரைவை இறுதி செய்வதற்கு முன் பொது மக்களின் கருத்துகளுக்காக முன் வைக்கப்படும் என்றாா்.

இதை ஏற்ற நீதிபதிகள், 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன் ஏற்பட்டது? என்பது குறித்தும், அறிவிப்பின் நிலை என்ன என்பது குறித்தும் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com