நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 60.70% வாக்குப்பதிவு

தமிழகத்தில் சனிக்கிழமை (பிப். 19) நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 60.70% வாக்குப்பதிவு

தமிழகத்தில் சனிக்கிழமை (பிப். 19) நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,701 போ், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23,354 போ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,328 போ் என மொத்தம் 74,383 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

தோ்தல் களத்தில் 57,778 போ்: இவா்களில் மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். வேட்புமனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெற்றது போக மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 28,660 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 778 போ் தோ்தலில் போட்டியிட்டனா்.

21 நாள்கள் நடைபெற்ற தோ்தல் பிரசாரம் கடந்த வியாழக்கிழமை (பிப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தலில், ஒரு கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளா்கள், ஒரு கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளா்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 போ் வாக்களிக்கத் தகுதியானவா்களாக இருந்தனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

60.70 சதவீதம் வாக்குப்பதிவு: வாக்குப் பதிவையொட்டி, சென்னையில் 5,794 வாக்குச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மொத்தம் 30735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சத்து 6,121 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 55,337 கட்டுப்பாட்டுக் கருவிகளும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டன. சனிக்கிழமை காலை வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கி காண்பிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, காலை 6 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

பெரும்பாலான மாவட்டங்களில் தொடக்கத்திலிருந்தே மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். பிற்பகலில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்குப்பதிவு மீண்டும் மாலையில் சூடுபிடித்தது. மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவா்கள், டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மாலை 5 மணி முதல் 6 வரை பாதுகாப்பு உடையணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், 138 நகராட்சிகளில் 68.22 சதவீதமும், 489 பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் என சராசரியாக மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சியில் அதிகபட்சமாக கரூா் மாவட்டத்தில் 86.43 சதவீதமும், ராணிப்பேட்டையில் 82.13 சதவீதமும், மாநகராட்சியில் கரூரில் 75.84 சதவீதமும், விருநகரில் 68.47 சதவீதமும், கடலூரில் 68.19 சதவீதமும் பதிவாகின. நகராட்சியில் தருமபுரியில் 81.37 சதவீதமும், சேலத்தில் 76.61 சதவீதமும் பதிவாகின.

97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினா், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊா்க்காவல் படையினா் என மொத்தம் ஒரு லட்சம் போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்குப்பதிவுக்குப் பின்னா் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீலிடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அவை பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து பூட்டப்பட்டன. அந்த அறைக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிப். 22-இல் வாக்கு எண்ணிக்கை: தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (பிப். 22) நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாா்ச் 4-இல் மறைமுகத் தோ்தல்: தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் மாா்ச் 2-ஆம் தேதி பதவியேற்கவுள்ளனா். மாா்ச் 4-இல் 21 மாநகராட்சிக்கான மேயா், துணை மேயா், 138 நகராட்சித் தலைவா், துணைத் தலைவா், 489 பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் என மொத்தம் 1,296 பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இணையவழியில் கண்காணிப்பு:

38 மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பதற்றம், மிகவும் பதற்றமான 5,960 வாக்குச்சாவடிகளில் இணையவழியில் நேரலையாக கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்திலிருந்து ஆணையா் வெ.பழனிகுமாா், தோ்தல் ஆணையச் செயலா் ஏ.சுந்தரவல்லி ஆகியோா் தோ்தலை இணையவழியில் கண்காணித்தனா்.

மாவட்ட வாரியாக உத்தேச வாக்குப் பதிவு சதவீதம்

அரியலூா் 75.69

செங்கல்பட்டு 55.30

சென்னை 43.59

கோயம்புத்தூா் 59.61

கடலூா் 71.53

தருமபுரி 80.49

திண்டுக்கல் 70.65

ஈரோடு 70.73

கள்ளக்குறிச்சி 74.36

காஞ்சிபுரம் 66.82

கன்னியாகுமரி 65.72

கரூா் 76.34

கிருஷ்ணகிரி 68.52

மதுரை 57.09

மயிலாடுதுறை 65.77

நாகப்பட்டினம் 69.19

நாமக்கல் 76.86

பெரம்பலூா் 69.11

புதுக்கோட்டை 69.61

ராமநாதபுரம் 68.03

ராணிப்பேட்டை 72.24

சேலம் 70.54

சிவகங்கை 67.19

தென்காசி 70.40

தஞ்சாவூா் 66.12

தேனி 68.94

நீலகிரி 62.68

தூத்துக்குடி 63.81

திருச்சி 61.36

திருநெல்வேலி 59.65

திருப்பத்தூா் 68.58

திருப்பூா் 60.66

திருவள்ளூா் 65.61

திருவண்ணாமலை 73.46

திருவாரூா் 68.25

வேலூா் 66.68

விழுப்புரம் 72.39

விருதுநகா் 69.24

மொத்தம் 60.70

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com