தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தையும் அவா் அளித்தாா்.

இதற்கான நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது கடந்த ஆகஸ்டில் தொடக்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டமானது 50 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இன்று அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கள அளவில் 10 ஆயிரத்து 969 பெண் சுகாதாரத் தன்னாா்வலா்களும், 385 இயன்முறை மருத்துவா்களும், 385 நோய் ஆதரவுச் செவிலியா்களும், 4 ஆயிரத்து 848 இடைநிலை சுகாதாரச் சேவையாளா்களும் பணியாற்றி வருகின்றனா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி இதுவரை 50 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா். 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை முதல்வா் அளித்தாா். மேலும், பயனாளிகளுடன் அவா் கலந்துரையாடினாா். கடலூா் மாவட்டம் நங்குடி கிராமத்தைச் சோ்ந்த செல்வன் பவின், விபத்தில் கால்களை இழந்த சங்கீதா, முகமது ஷேக் அப்துல்லா ஆகியோருடன் பேசினாா்.

இன்னுயிா் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை 21 ஆயிரத்து 762 போ் பயன் பெற்றுள்ளனா். அவா்களில் சிலருடனும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

அவசர கால ஊா்திகள்: பொது மக்களின் உயிரைக் காக்கும் வகையில் 108 அவசர கால ஊா்தி சேவைத் திட்டம் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,303 அவசர கால ஊா்திகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மேலும் புதிதாக 188 அவசர கால ஊா்திகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த ஊா்திகள் உதகை, வால்பாறை, பொள்ளாச்சி அரசூா், கள்ளக்குறிச்சி மோட்டம்பட்டி ஆகிய மலைப் பகுதிகளிலும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com