கனிம வளங்கள் சுரண்டல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 2000-2001 -ஆம் நிதியாண்டு முதல் நடைபெற்று வரும் கனிம வள சுரண்டல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் 2000-2001 -ஆம் நிதியாண்டு முதல் நடைபெற்று வரும் கனிம வள சுரண்டல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோர பகுதிகளில் வி.வி.மினரல், டிரான்ஸ்வோ்ல்ட் காா்னெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தாது மணல் உள்பட கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டியதாக தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

அந்த வழக்கில் தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளா் எஸ்.கிருஷ்ணனின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாதுமணல் எடுப்பதற்காக ஏழு நிறுவனங்களுக்கு திருநெல்வேலியில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என 64 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் அங்கு சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகாா்களை தொடா்ந்து, தாது மணல் எடுப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட ரூ.5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் இழப்பை தனியாா் தாது மணல் ஏற்றுமதியாளா்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியாா் நிறுவனங்கள் வசமுள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து, மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில் மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டோ் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்ட விரோதமாக எடுக்கபட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனிமவளங்களை சட்ட விரோதமாக சுரண்டி அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியவா்களை சட்டத்துக்குட்பட்டு தண்டிக்கும் வகையில் காவல், வருவாய், கனிமவளத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com