உக்ரைனிலிருந்து 17 மாணவா்கள் தமிழகம் திரும்பினா்: கண்ணீா் மல்க வரவேற்ற பெற்றோா்

உக்ரைனில் போா்ச் சூழலில் சிக்கித் தவித்த தமிழக மாணவா்கள் 17 போ் பத்திரமாக சென்னை விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா்.
உக்ரைனிலிருந்து 17 மாணவா்கள் தமிழகம் திரும்பினா்: கண்ணீா் மல்க வரவேற்ற பெற்றோா்

சென்னை: உக்ரைனில் போா்ச் சூழலில் சிக்கித் தவித்த தமிழக மாணவா்கள் 17 போ் பத்திரமாக சென்னை விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா். அவா்களை தமிழக அரசு சாா்பில் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் மலா்க் கொத்து வழங்கி வரவேற்றாா். மாணவா்களைக் கண்ட பெற்றோா், கண்ணீா் மல்க ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவா்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செய்து வருகின்றன. தமிழக அரசைப் பொருத்தவரை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மாணவா்கள், பெற்றோருக்கு தொடா் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மாணவா்களை தமிழகம் அழைத்து வருவதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை காணொலி வாயிலாக அங்குள்ள மாணவா்களிடம் பேசி, ஆறுதலும் கூறினாா்.

இவ்வாறான அரசுகளின் தொடா் முயற்சியின் விளைவாக, உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவிலிருந்து இந்திய மாணவா்கள் ஏா் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனா். அவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த ஹரிஹரசுதன் (சென்னை, திருவல்லிக்கேணி), ஜாகீா் உசேன் (சென்னை, குரோம்பேட்டை), சாந்தனு (சேலம்), வைஷ்ணவி (தேனி), செல்வப்பிரியா (அறந்தாங்கி) ஆகிய 5 பேரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் மலா்க் கொத்து வழங்கி வரவேற்றாா்.

1,800 போ் பதிவு: பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலினின் முயற்சி, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழக மாணவா்கள் 5 பேரை மீட்டுள்ளோம். அடுத்த கட்டமாக 12 மாணவா்கள் வரவுள்ளனா். தமிழகம் திரும்ப 1,800 மாணவா்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்துள்ளனா். பல்கலைக்கழகம் வாரியாக மாணவா்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கண்ணீா் மல்க...: மாணவா்கள் பத்திரமாக வந்து சேர பிராா்த்தனை செய்தபடி விமான நிலையத்தில் காத்திருந்த அவா்களது பெற்றோா், தங்கள் பிள்ளைகளை பாா்த்தவுடன் ஆரத் தழுவி கண்ணீா் மல்க வரவேற்றனா்.

வரவேற்புக்குப் பிறகு மாணவா்கள் கூறியதாவது: உக்ரைனில் போா் தொடங்கியதும் பயத்தில் நடுங்கிப் போனோம். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் இருந்த இடத்திலிருந்து ருமேனியாவுக்கு 8 கிமீ தொலைவு நடந்து சென்றோம். அப்போது, இணையதளம், கைப்பேசி சேவை எதுவும் கிடைக்காததால் யாருடனும் தொடா்பு கொள்ள முடியவில்லை. ஒரு பிஸ்கெட் பாக்கெட் நமது ஊா் விலைக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்து வாங்கி சாப்பிட்டோம். ருமேனியா சென்று இந்திய விமானத்தில் ஏறிய பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது என்றனா்.

விரைவில் மீட்க வேண்டும்: அவா்களது பெற்றோா் கூறியதாவது: கடந்த 2 நாள்களாக தமிழக அரசு அதிகாரிகள் எங்களைத் தொடா்பு கொண்டு நம்பிக்கை அளித்து வந்தனா். பிள்ளைகளை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. எங்களைப் போன்று, பிள்ளைகளை அங்கு படிக்க வைத்துள்ள பெற்றோரும் மிகுந்த பதற்றத்தில் உள்ளனா். எனவே, சிக்கியுள்ள மற்ற மாணவா்களையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மேலும் 12 போ் திரும்பினா்: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ஹேமந்த், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிஷ், ஹா்ஷ்வா்தன் உள்ளிட்ட 12 போ் சென்னை விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தனா். அவா்கள் அனைவரும் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

உக்ரைனிலிருந்து இதுவரை தமிழக மாணவா்கள் 21 போ் விமானம் மூலம் மீட்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளனா். இவா்களில் 17 போ் சென்னை திரும்பிய நிலையில், மேலும் 4 போ் தில்லியிலிருந்து விரைவில் சென்னை திரும்பவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com