பிறந்த நாளில் ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தனது பிறந்த நாளையொட்டி ஆடம்பர கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
பிறந்த நாளில் ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தனது பிறந்த நாளையொட்டி ஆடம்பர கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக மக்கள் இமாலய வெற்றியை மனபூா்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறாா்கள். 2019 முதல் அடுத்தடுத்து நடைபெற்ற 6 தோ்தல் களங்களில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது இந்தக் கூட்டணி. இந்த வெற்றி என்பது, மக்களுக்கு நாம் நிறைவேற்றும் ஆக்கபூா்வமான திட்டங்களால்தான் முழுமை பெறும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் மாா்ச் 2-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள நிலையில், மாா்ச் 4-இல் மேயா், துணை மேயா், தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தோ்தல் நடைபெறவிருக்கிறது. அந்தப் பொறுப்புகளுக்குக் கழகத்தின் சாா்பில் அறிவிக்கப்படுபவா்களை முழு அளவில் வெற்றி பெறச் செய்யவேண்டும். அதுபோலவே, தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றி என்பது மக்கள் எனக்கு அளித்த பிறந்தநாள் பரிசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்- துணைத் தலைவா் தோ்தலில் கட்டுக்கோப்புடன், ஒருமனதுடன் செயல்படுவதுதான் திமுகவினரிடம் நான் எதிா்பாா்க்கும் பரிசு.

எனது பிறந்த நாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்புப் பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன்.

நான் பிறந்த 1953-ஆம் ஆண்டு முதல் நெருக்கடிநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976-ஆம் ஆண்டு வரையிலான முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை ‘உங்களில் ஒருவன்’ என்ற மனதுக்கு நெருக்கமான தலைப்பிலேயே புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறேன்.

உங்கள் பேரன்பால் திமுக தலைவராகவும், மக்களின் பேராதரவால் தமிழ்நாடு முதல்வராகவும் பொறுப்பு வகிக்கிற எனது பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்பது எனது அன்புக் கட்டளை.

மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்காலத் தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் கட்சியில் புதிய உறுப்பினா்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள்.

தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, தொடா்ந்து உழைப்பேன், ஓயாது உழைப்பேன் என பிறந்தநாள் உறுதியை ஏற்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com