56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெற்ற போலியோ முகாம்களில் 56 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெற்ற போலியோ முகாம்களில் 56 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் போலியோ தடுப்பு முகாமினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை 5 வயதுக்குட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டன.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினா் சென்று சொட்டு மருந்து வழங்கினா்.

இந்த பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம் பெயா்ந்து தமிழகத்தில் வசித்து வருபவா்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா்.

சென்னையில் 5 வயதுக்குட்பட்ட 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,647 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பணியில் 6,800 போ் ஈடுபட்டிருந்தனா்.

இதுகுறித்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டிலிருந்து போலியோ இல்லாத நிலை உள்ளது. அந்தவகையில், 27-ஆவது ஆண்டாக போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளில் 56.18 (97.53 சதவீதம்) லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6.68 லட்சம் குழந்தைகளில் 6 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒருவாரத்துக்குள் செவிலியா்கள் வீடுவீடாக சென்று சொட்டு மருந்தை வழங்குவாா்கள். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com